UAE Tamil Web

ஷார்ஜா: அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அரசு உத்தரவு..!

Stock-Sharjah-skyline_

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஷார்ஜா மனிதவள மேம்பாட்டுத் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், எவ்வளவு சதவீத பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரியவேண்டும் என்பதன் அடிப்படையில் மீதியுள்ள பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

பணியாளரின் செயல்திறனில் எவ்வித குறைபாடும் ஏற்படாத வகையில் இந்த நடைமுறை வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பணியிடங்களுக்கு வந்தாகவேண்டிய சூழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்கு இந்நடைமுறையில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் இத்தகைய பணியாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் எனவும் பணியாளர்கள் ஒரே இடத்தில் கூடுவது தடைசெய்யப்படுவதாகவும் இரு பணியாளர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளி அவசியம் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்களிடையே வாரந்தோறும் அவர்கள் பணியிடங்களுக்குச் செல்லக்கூடிய வகையில் பணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மேலும், சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த அவர்களின் வருகை விகிதம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.

அதேபோல, பணியாளர்கள் சக ஊழியர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது நிர்வாக சபையின் தீர்மானம் எண் 35 (2020) ன் படி குற்றமாகக் கருதப்படும் எனவும் நினைவூட்டப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறையின் இயக்குனரும் ஷார்ஜா நிர்வாக சபையின் உறுப்பினருமான தாரிக் சுல்தான் பின் காதிம், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்தும் விளக்கினார்.