UAE Tamil Web

ஷார்ஜா: பொது மற்றும் தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவு..!

Online Class

தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஷார்ஜா முழுவதிலும் உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் (SPEA) உத்தரவிட்டுள்ளது. நர்சரி பள்ளிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் எனவும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதிமுதல் இந்நடைமுறை அமலுக்கு வருவதாகவும் SPEA வின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ECDMT) அறிவுறுத்தலுக்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SPEA வின் இயக்குனர் அலி அல் ஹோசாணி தெரிவித்தார்.

கடந்த பருவத்தில் 90 சதவீத வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றதாகவும், அதனால் ஆன்லைன் வகுப்புகள் 100 சதவீதம் நல்ல பலனைக் கொடுக்கும் எனவும் ஹோசாணி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்களின் ஆரோக்கியத்தை ECDMT மற்றும் SPEA தொடர்ந்து கண்காணிக்கும் என ஹோசாணி குறிப்பிட்டார். அதேபோல, பள்ளிக்கு எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வரவேண்டும் என்பதனை பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுத்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைத் தொடர்ந்து கடைபிடித்தல் வேண்டும்.

தினசரி குறிப்பேடு மற்றும் கொரோனா பாசிட்டிவ் நபர்கள் பற்றிய பதிவு தளமான தமாம் (TAMAM) ல் (பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கை எண் 60 (2020), நர்சரிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கை எண் 96 (2020) ன் படி) தினசரி தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என பள்ளிகளை வலியுறுத்துவதாக ஹோசாணி தெரிவித்தார்.

ஆசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும், எதிர்வரும் காலங்களில் பள்ளிக்குத் திரும்பும் சூழ்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவை உதவும் எனவும் ஹோசாணி தெரிவித்தார்.

Online Class
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap