UAE Tamil Web

தந்தையின் கண்முன்னே ராட்சத அலையால் அடித்துச்செல்லப்பட்ட குழந்தைகள் – காப்பாற்றச் சென்றபோது நிகழ்ந்த விபரீதம் – மீள முடியாத சோகத்தில் அமீரக வாழ் இந்திய குடும்பம்..!

Indian expat

அமீரக பொதுத் துறையில் பணிபுரியும் அமீரக வாழ் இந்தியரான இஸ்மாயீலுக்கு வயது 47. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த வாரம் தனது குடும்பத்தினரை அமீரகத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். தனது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் தனது சகோதரர் வீட்டினருடன் கார்னிச் பகுதிக்கு  விடுமுறைக்காக சென்றிருக்கிறார் இஸ்மாயீல்.

- Advertisment -

கடலில் குளிக்க குழந்தைகள் விருப்பம் தெரிவிக்கவே, இஸ்மாயீலும் அனுமதி அளித்திருக்கிறார். கடலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் திடீரென ராட்சத  அலையால் அடித்துச்செல்லப்பட, இஸ்மாயீல் உடனடியாக கடலுக்குள் குதித்திருக்கிறார். இரண்டு மகள்களை அவர் கரை சேர்த்திருக்கிறார்.

தனது மூத்த மகளான அமல் -ஐ (18) மீட்கும் முயற்சியில் இருந்தபோது தந்தை மற்றும் மகள் ஆகிய இருவருமே ராட்சத் அலை ஒன்றினால் அடித்துச் செல்லப்பட்டார்கள். சம்பவம் குறித்து ஷார்ஜா காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீட்புப்படையினரால் இஸ்மாயில் மற்றும் அவரது மகளின் உயிரில்லாத உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.

இஸ்மாயிலின் மற்ற குழந்தைகள் குவைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த உயிரிழப்பினால் மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

“உடல்களை இந்தியா எடுத்துச்செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்துவிட்டது. மருத்துவமனையில் இருந்து பிணக்கூராய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை நாங்கள் ஊர் திரும்புவோம்” என இஸ்மாயிலின் உறவினர் சமத் கொடுமையில் தெரிவித்தார்.

அமீரகத்தில் தன்னுடன் வசித்துவந்த குடும்பத்தினரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தாயகத்திற்கு இஸ்மாயில் அனுப்பியிருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினரை காண ஆவலுடன் காத்திருந்தவரின் மறைவு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.