ஷார்ஜாவில் முழுவதும் 3D பிரிண்டரால் கட்டப்பட்டுவந்த வீட்டின் பணிகள் தற்போது முழுமையடைந்திருக்கிறது. ஷார்ஜா ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா-வின் (SRTI Park) தலைமை நிர்வாக அதிகாரியான ஹுசைன் அல் மஹ்மோதி இதுகுறித்துப் பேசுகையில்,” சிக்கலான நிலப்பகுதியில் அரபு பாரம்பரியத்தின்படி இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் 3D பிரிண்டரால் கட்டப்பட்ட முதல் வீடு என்னும் பெருமை இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கிறது” என்றார்.
ஷார்ஜா 24 செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,” இந்தத் தொழில்நுட்பம் மூலமாக அதிகமான வீடுகளை உருவாக்க விரும்புகிறோம். இந்த தொழில்நுட்பம் அமீரகத்தின் போட்டித்தன்மையை ஆதரிக்கும். அதுபோலவே கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்த இந்தத் தொழில்நுட்பம் உதவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சொந்தமான ஆராய்ச்சி அமைப்புகளின் உதவியுடன் இந்த வீடானது 2 வாரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை அமேரிக்கன் யூனிவெர்சிட்டி ஆஃப் ஷார்ஜா முன்னெடுத்தது.

பின்லாந்தில் உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள ஆய்வு நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிப்பு செய்திருக்கின்றன. “ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமீரகத்தின் இடத்தினை மேலும் வலுப்பெறச் செய்ய இந்த திட்டம் பெரும்பங்காற்றும் என நம்புகிறேன்” என ஹுசைன் தெரிவித்தார்.
