UAE Tamil Web

“அப்பாவைக் கைது செய்யுங்கள்” – மகன் கொடுத்த புகாரைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்..!

Sharjah-Police_

ஷார்ஜா காவல்நிலையத்திற்கு கடந்தவாரத்தில் ஒரு இளைஞர் வந்திருக்கிறார். 16 வயதான அவர் தனது தந்தையின் மீது புகாரளித்திருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த காவல்துறையினர் உடனடியாக சமூக ஆதரவு மையத்திற்கு தகவல் அளித்தனர்.

என்ன நடந்தது?

தன் தந்தையின் மீது புகாரளித்த இளைஞன் பப்ஜி விளையாட்டுப் பிரியர். எப்போதும் தனது மொபைலில் “போர்” புரிந்துகொண்டிருக்கும் இளைஞரை அவரது தந்தை ஒரு நாள் பந்தாடியிருக்கிறார். அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதால் நேரடியாக காவல்நிலையத்திற்கு வந்திருக்கிறார் அந்த பப்ஜி வீரர்.

உடனடியாக அந்த தந்தைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது மகன் எப்போதும் மொபைல் போனிலேயே பொழுதைக் கழிப்பதாகவும் இதனால் அவனுடைய படிப்பு பாழாகிறது எனவும் வருத்தத்துடன் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் “எனக்கு அவனுடைய (இளைஞர்) எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருக்கிறது” என காவல்துறையினரிடம் உருக்கமாகத் தெரிவித்தார்.

சமூக ஆதரவு மையத்தின் இயக்குனர் மோனா சுரோர் இதுகுறித்துப் பேசுகையில்,” அவன் (இளைஞர்) தனது தந்தை மீது மிகவும் கோபமாக இருந்தான். தனக்கு வேண்டியவற்றை செய்ய உரிமை இருப்பதாக அவன் கூறினான். அவனது தந்தையின் கோபம், அதில் உள்ள அன்பு ஆகியவை குறித்து அவனிடம் எடுத்துக்கூறினேன். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவனுடைய தவறு அவனுக்கே புரிந்தது. தன்னுடைய தந்தையிடம் அவன் மன்னிப்புக் கேட்டான்” என்றார்.

குழந்தைகளை குறிப்பாக வளரிளம்பருவத்தில் உள்ள குழந்தைகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் எனவும் அடிப்பது சிறந்த யுக்தியில்லை எனவும் அந்த தந்தையிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இளைஞரிடம் “உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது?” என அதிகாரி கேட்டதற்கு “ஓவியம் வரைதல்” என இளைஞர் பதிலளித்தார். உடனே அதிகாரிகள் அந்த இளைஞருக்கு பரிசு ஒன்றினை வழங்கினர்.

“விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டும் சமூக பிரச்சனைகளை கையாளக்கூடாது. சில நேரங்களில் உளவியல் ஆலோசனைகளும் அவசியமாகின்றன” என சுரோர் தெரிவித்தார்.

Sharjah-Police_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap