UAE Tamil Web

ரமலான்: இப்தாருக்கு 10 லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்க இருக்கும் தொண்டு நிறுவனம்..! – நீங்களும் உதவலாம்..!

meals

இந்த வருட ரமலானின் போது, இப்தாருக்கு ஷார்ஜா மற்றும் அமீரகத்திற்கு வெளியே மொத்தம் 93 இடங்கள் மூலமாக 10 லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்க இருக்கிறது ஷார்ஜா சாரிடபிள் இண்டர்நேஷனல் எனப்படும் தொண்டு நிறுவனம். இதற்காக பங்களிப்பு செய்ய விரும்புவோருக்காக தங்களது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

இந்த நிறுவனம் தனது கிளைகளைப் பரப்பியுள்ள பிற நாடுகளிலும் நோன்பு இருப்பவர்களுக்கு உணவு வழங்க இருக்கிறது. இப்பணிகள் அந்நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அசோசியேஷன் மூலமாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்திற்கு மானுடவியலாளர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தவேண்டும் என இந்நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல்லா சுல்தான் பின் காதிம்,” இப்பணிகளை மேற்கொள்ள ரமலான் சுப்ரீம் கமிட்டி நன்கொடைகள் பெற்றுவருகிறது. இதன்மூலம் இப்தார் உணவுகள் அளிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. ஷார்ஜா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நோன்பு இருப்பவர்களுக்கு உணவுகளை வழங்க இருக்கிறோம். மானுடவியலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்” என்றார்.

உணவு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள 31 சமையல் அறைகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது ரமலான் சுப்ரீம் கமிட்டி. உணவைத் தயாரித்தல், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு இந்த சமையல் அறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஷார்ஜா முழுவதிலும் மொத்தம் 93 இடங்களில் உணவு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக ஷார்ஜாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் இடத்தில் உள்ள குறைவான வருமானம் பெரும் குடும்பங்கள், தொழிலாளர்கள் இதனால் பலன் பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா முழுவதும் ரமலான் காலத்தில் தினசரி 25,000 உணவுகள் என்ற வீதத்தில் 750,000 உணவுகள் வினியோகம் செய்யப்படும் என சுல்தான் தெரிவித்தார். நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் அசோசியேஷனின் இணையதளம், ஸ்மார்ட் லிங்க், குறுஞ்செய்தி, கிரெடிட் கார்டு அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலமாக மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கட்ட தகவல்களை அளிக்க விரும்புவோர் 80014 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.