UAE Tamil Web

இனி இவர்களுக்கு சர்வீஸ் செய்ய கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை.! உணவு விற்பனை நிலையங்களுக்கு அதிரடி உத்தரவிட்ட ஷார்ஜா..

sharjah

ஷார்ஜா நகராட்சியானது ஷார்ஜாவிலுள்ள உள்ள அனைத்து உணவு நிலையங்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் போக்குவரத்து விதிகளை மீறும் வகையில், கார்களில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்குவதை நிறுத்த கூறியுள்ளது.

- Advertisment -

சமூகத்தின் சில உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உணவக வளாகங்களுக்கு அருகில் தங்கள் கார்களை நிறுத்தி காத்திருப்பவர்கள் அல்லது போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தங்கள் வாகனங்களை நிறுத்தி காத்திருப்பவர்களுக்கு சேவைகளை வழங்க கூடாது என்று உணவகங்களை நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் அழகிய தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கு ஏற்பவும் இம்முடிவு உள்ளது.

பொது சுகாதாரத் துறை மற்றும் மத்திய ஆய்வகங்களுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் ஷேகா ஷாசா அல் முலா கூறுகையில், பார்க்கிங் இடங்களை தவறாக ஆக்கிரமித்து கார்களில் காத்திருப்பவர்களுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்துமாறு எமிரேட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களுக்கும் நகராட்சி ஏற்கனவே ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்த விதிகளை மீறும் வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஷார்ஜாவிலுள்ள உணவகங்கள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய ஆய்வு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

வாடிக்கையாளர் சேவைத் துறையின் உதவி பொது மேலாளர் காலித் பின் ஃபலாஹ் அல்-சுவைதி பேசும் போது, ஷார்ஜாவில் சிறப்பு வகைகளுக்காக அல்லது ஸ்டோர்களுக்காக ஒதுக்கப்பட்ட பொது வாகன நிறுத்துமிடத்தை தவறாக பயன்படுத்துவதை கண்காணிக்க பொது பார்க்கிங் துறை அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி வருகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உணவகங்களுக்கு அருகில் சாலையின் நடுவே தங்களது வாகனங்களை நிறுத்தி, தங்களுக்கு உணவு வழங்கப்படும் வரை காத்திருக்கும் எந்த ஒரு வாகன ஒட்டி மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பார்க்கிங் செய்வதை எளிதாக வணிக நிறுவனங்களுக்கு பார்க்கிங் முன்பதிவு சேவை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக சிறப்பு பார்க்கிங் கேட்டு விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட பகுதி அதிகாரியால் நேரில் ஆய்வு செய்யப்படும். பார்க்கிங் கேட்கப்பட்ட இடம் எவ்விதமான போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தாது என்பது உள்ளிட்ட அனைத்து படிகளும் உறுதியான பின் பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்ய வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.