UAE Tamil Web

ஷார்ஜா: குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் தங்கியிருந்த 13,000 தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் வெளியேற்றம்..!

shj-muni-

ஷார்ஜாவில் குடும்பங்கள் மட்டுமே வாழ அனுமதியளிக்கப்பட்டிருக்கும் இடங்களில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

என்ன காரணம்?

“எனக்கு வெளியே செல்லவே அச்சமாக இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கே பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள். ஆண்கள் (பேச்சுலர்கள்) மற்றும் தொழிலாளர்கள் கூட்டமாக எனது வீட்டருகே நிற்கிறார்கள். மேலும், அவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்கிறார்கள்”

மேலே நீங்கள் படித்தது ஷார்ஜாவில் உள்ள அல் காதிசியா பகுதியில் வசிக்கும் ஏமிராட்டி பெண் ஒருவர் அளித்த புகாரைத்தான். தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் நேரலை நிகழ்ச்சியின்போது இப்பெண் புகாரளிக்க, இந்த விஷயம் ஷார்ஜாவின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி (Sheikh Sultan Bin Mohammed Al Qasimi) அவர்களுடைய காதுகளை எட்டியிருக்கிறது.

இதனையடுத்து அல் காதிசியா பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்களை உடனடியாக வெளியேற்றும்படி ஷார்ஜா நகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார் ஆட்சியாளர். ஆகவே, இதற்கான பணிகள் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கப்பட்டன.

உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா போலீஸ் மற்றும் ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்துடன் இணைந்து இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா நகராட்சியின் இயக்குனர் தபிட் அல் துரைஃபி (Thabit Al Turaifi),” குடும்பங்களின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் குடியிருப்பு விதிமுறைகளை மீறி வசித்துவந்த 13,000 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பரவலாக நடத்தப்பட்ட 3,000 ஆய்வின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது” என்றார்.

சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களின் குடியிருப்புக்கு செல்லும் மின்சார மற்றும் நீர் இணைப்புகளை நகராட்சி துண்டித்திருப்பதாக துரைஃபி தெரிவித்தார். மேலும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இடையேயான வசிப்பிட ஒப்பந்தங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஷார்ஜாவின் பல குடியிருப்பு பகுதிகளிலும் நடைபெற்றுவந்த விதிமுறைமீரல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஷார்ஜா நகராட்சி இயக்குனர் குறிப்பிட்டார். இந்த முயற்சியில் தங்களுக்கு உதவிபுரியும் ஷார்ஜா போலீஸ் மற்றும் ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிப்பதாக துரைஃபி தெரிவித்தார்.

மேலும் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் தங்கி இருப்பது பற்றி புகாரளிக்க பொதுமக்கள் ஷார்ஜா நகராட்சியை அதன் ஹாட்லைன் எண் 993-ல் தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

shj-muni-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap