UAE Tamil Web

ஷார்ஜா: 33 புதிய பார்க்கிங் இடங்களுக்கு உரிமம் அளித்த நகராட்சி..!

ABU-SHAGARA-SHARJAH

ஷார்ஜாவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 33 தனியார் பார்க்கிங் பகுதிகளுக்கு ஷார்ஜா நகராட்சி உரிமம் வழங்கியிருக்கிறது. இந்த வருட துவக்கத்திலிருந்து இதுவரையில் 155 தனியார் பார்க்கிங் பகுதிகளுக்கு உரிமம் வழங்கியிருப்பதாக நகராட்சி தெரிவித்திருக்கிறது.

ஷார்ஜாவின் அழகை மேம்படுத்தும் நகராட்சியின் திட்டங்களின் ஒருபகுதியே இந்நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மணற்பாங்கான இடத்தில் குடியிருப்பாளர்கள் பயன்படுத்திவந்த பார்க்கிங் பகுதிகளுக்கு நகராட்சி தடை விதித்தது.

“ஷார்ஜாவில் மொத்தம் 300 தனியார் பார்க்கிங் இடங்கள் இருக்கின்றன. நகராட்சியால் உரிமம் பெற்று பொது பார்க்கிங் துறையால் நிர்வகிக்கப்படும் இடங்கள் மொத்தம் 20,000 ஆகும்” என நகராட்சியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு இயக்குனர் காலித் ஃபாலா அல் சுவைதி (Khalid Falah Al Suwaidi) தெரிவித்தார்.

“வழிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு இந்த தனியார் பார்க்கிங் பகுதிகளுக்கு நகராட்சியால் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது” என பொது பார்க்கிங் துறையின் இயக்குனர் அலி அகமது அபு காஸின் (Ali Ahmed Abu Ghazin) தெரிவித்தார்.

இந்த தனியார் வாகன நிறுத்துமிடங்களின் முதலீட்டாளர்களுக்கு நிறுவனங்களின் பெயர் மற்றும் பார்க்கிங் இடங்கள் மற்றும் கட்டணங்களின் அளவைக் குறிக்கும் தகவல் பலகைகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அங்கீகரிக்கப்படாத இடங்களில் வாகனவோட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தவேண்டாம் எனவும் அபு காஸின் தெரிவித்தார்.

ABU-SHAGARA-SHARJAH
0 Shares
Share via
Copy link