நாட்டில் கோவிட் -19 தொற்று பரவல் நிலையாக நீடிக்கும் நிலையில், தொற்று பரவலைக் குறைப்பதற்கான சமூகப் பொறுப்பை அதிகரிக்க சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியில், ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம்(SEWGA) இறங்கியுள்ளது.
இதற்காக SEWGA தற்போது தனது அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஜுலால் பாட்டில் குடிநீருடன்(Zulal water), கிருமிநாசினி துடைப்பான்கள் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
“ஷார்ஜா மற்றும் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இன்று முதல் தொற்றிலிருந்து காக்கும் சுத்திகரிப்பு பொருட்கள் பாட்டில் தண்ணீருடன் இலவசமாக விநியோகிக்கப்படும்” என்று SEWGA-ன் தலைவர் டாக்டர் ரஷீத் அலீம் கூறியுள்ளார். குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஷார்ஜாவின் ஆட்சியாளரும், உச்ச சபையின் உறுப்பினருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி உத்தரவின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குடியிருப்பாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்தார்.