கோர் ஃபக்கான் ஆம்பிதியேட்டர் திறப்பு விழாவை நினைவுகூறும் விதமாக, அமீரக மத்திய வங்கி (CBUAE) தங்க மற்றும் வெள்ளிக் காசுகளை வெளியிட இருக்கிறது.
ஷார்ஜாவின் வரலாற்று மற்றும் கலாச்சார இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை அமீரக மத்திய வங்கி முன்னெடுத்துள்ளது.
50 கிராம் எடை கொண்ட 100 தங்க காசுகளும் 40 கிராம் எடை கொண்ட 1000 வெள்ளி காசுகளையும் மத்திய வங்கி வெளியிட இருக்கிறது.
நாணயங்களின் முன் பக்கத்தில் இந்நிகழ்வின் லோகோ இடம்பெற்றுள்ளது. பின்பக்கத்தில் அரேபிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காசுகள் அனைத்தும் ஷார்ஜா இஸ்லாமிக் வங்கியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்திலோ அதன் கிளைகளிலோ இவை விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோம் கட்டிடக்கலையை சார்ந்து கட்டப்பட்ட இந்த கோர் ஃபக்கான் ஆம்பிதியேட்டர் கடந்த டிசம்பர் 14, 2020 ஆம் தேதி ஷார்ஜாவின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர். சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.