UAE Tamil Web

ஷார்ஜா: அரசு அலுவலகங்களில் அமீரக தேசிய தின கொண்டாட்டங்கள் திடீர் ரத்து.. காரணம்.?

sharjah

அமீரக தேசிய தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஷார்ஜா அரசு அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் தேசிய தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கோவிட்-19 தொற்று பரவலை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஷார்ஜா கமிட்டி அறிவித்துள்ளது. இது பற்றி பேசியுள்ள கமிட்டி தலைவர் காலித் ஜாசிம் அல் மிட்ஃபா, மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கு ஷார்ஜா அதிகாரிகளின் அதிக முன்னுரிமை அளிப்பதாக குறிப்பிட்டார்.

எனினும் அல் மஜாஸ் ஆம்பிதியேட்டரில்(Al Majaz Amphitheatre) திட்டமிடப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சி அனைத்து கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி நடைபெறும். தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) பரிந்துரைத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், ஷார்ஜா நிர்வாக சபையின் அறிவுறுத்தல்களும் இசை நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றார்.

அல் மஜாஸ் ஆம்பிதியேட்டரில் நடைபெற உள்ள நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது சுகாதாரத்தை பராமரித்தல், சமூக இடைவெளி, தொடர்பு இல்லாத டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு , அனைத்து வளாகங்களையும் அடிக்கடி கிருமி நீக்கம் செய்தல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை அடங்கும், என்று அவர் மேலும் கூறினார்.

பார்வையாளர்களை கச்சேரி அரங்கிற்கு கொண்டு செல்ல கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்புப் பணியாளர்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு அனைத்து பங்கேற்பாளர்களின் வெப்பநிலையையும் கண்காணிப்பர்.

நிகழ்வில் பங்கேற்பவர்களை வழிநடத்த, கண்காணிக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவும் சிறப்பு பயிற்சி பெற்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நினைவு பரிசு விநியோகம் மற்றும் தனிப்பட்ட வாழ்த்துக்கள் பரிமாற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது. தியேட்டர் பகுதிக்குள் சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அல் மிட்ஃபா தெரிவித்துள்ளார்.