UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: 3 நாட்களுக்கு ஃப்ரீ பார்க்கிங் அறிவித்த ஷார்ஜா நகராட்சி…

sharja

தேசிய தினத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 3 வியாழக்கிழமை வரை, எமிரேட்டின் பெரும்பாலான பகுதிகளில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தி கொள்ளும் வகையில், இலவச பார்க்கிங் திட்டத்தை ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது.

- Advertisment -

இந்த பொது வாகன நிறுத்துமிட அறிவிப்பால், தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் குடியிருப்பாளர்கள் இலவச வாகன நிறுத்துமிடத்தை அனுபவிக்க முடியும். இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஷார்ஜா நகராட்சி, கட்டண பார்க்கிங் முறை டிசம்பர் 5 சனிக்கிழமை மீண்டும் தொடங்கும் என்று கூறியுள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பார்க்கிங் இடங்கள் கிடைக்க இலவச பார்க்கிங் திட்டம் அமலில் உள்ள நாட்களில், பார்க்கிங் இடங்களை தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய, அதாவது இரட்டை அல்லது தவறான பார்க்கிங்(double or wrong parking) போன்ற மீறல்களை தடுக்க பார்க்கிங் இன்ஸ்பெக்டர்கள் பார்க்கிங் இடங்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள், என்று ஷார்ஜா நகராட்சியில் பொது பார்க்கிங் துறை இயக்குநராக உள்ள அலி அகமது அபு காசியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தகவல் தெரிவித்துள்ள அவர், இந்த இலவச பார்க்கிங் சலுகையானது, வெள்ளி மற்றும் பொது விடுமுறைகள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பார்க்கிங் மண்டலங்களுக்கு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், குறிப்பாக முக்கிய மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய இடங்களை வழங்குவதற்கும், அவர்களின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது பார்க்கிங் தேடுவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கவும் கட்டணம் செலுத்தும் பார்க்கிங் மண்டலங்கள் அவசியம் என்பதை விளக்கியுள்ளார்.

கட்டண பார்க்கிங் மண்டலங்களை நீல அடையாள அட்டைகள் மூலம் எளிதில் அடையாளம் காண முடியும், இது வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படுவதை குறிக்கிறது என்றார்.