UAE Tamil Web

மறுசுழற்சி பொருட்களை தேசபக்தி கலைப்படைப்புகளாக மாற்றி இந்திய ஆசிரியை அசத்தல்.! ஷார்ஜா சஃபாரி மாலில் காட்சிக்கு வைப்பு

art

49-வது தேசிய தினம் அமீரகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ஆசிரியை ஒருவர் மறுசுழற்சி பொருட்களை கொண்டு தேசபக்தி கலைப்படைப்புகளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

- Advertisment -

ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான ரஷிதா அதில்(Rashida Adil), ஷார்ஜா இந்தியன் பள்ளியில் கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பெரும்பாலான மக்கள் அமீரக தேசிய தினத்தை குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியபோது, கலை ஆசிரியை ரஷிதா, தனது மாணவர்களை எக்கோ பிரெண்ட்லி வழியில் ஆக்கப்பூர்வமாக இருக்க ஊக்குவிப்பதில் மும்முரமாக இருந்தார்.

ஆசிரியை ரஷிதா கடந்த 5 மாதங்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 6 மணிநேரம் செலவு செய்து மர துண்டுகள், மணிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம், ரிப்பன்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மறுசுழற்சி பொருட்களை கொண்டு பல தேசபக்தி கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். ரஷிதாவின் கடின உழைப்பில் உருவாகியுள்ள தேசபக்தி கலைப்பொருட்கள் ஷார்ஜாவின் சஃபாரி மாலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தனது கலை படைப்புகள் பற்றி கூறியுள்ள ஆசிரியை ரஷிதா, ‘ஜூன் முதல் இந்த தேசபக்தி கலைப்படைப்புகளை உருவாக்க துவங்கினேன். தேசிய தின கொண்டாட்டங்களுக்கான நேரத்தில் நவம்பர் 24-ஆம் தேதிக்குள் அதை முடித்தேன். கலை ஆசிரியராக எனது நோக்கம் கலையை கற்பிப்பது மட்டுமல்லாமல், கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு செய்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் அழகான விஷயங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பித்தல் ஆகும்.

எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம் எதையும் தூக்கி எறிய தேவையில்லை. ஸ்கிராப் பொருட்களால் கலைப்பொருட்கள் உருவாக்கப்படும் முறையில், குழந்தைகள் கழிவு பொருட்களை குறைக்கவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் கற்றுக்கொள்கின்றனர் எனறார்.

வழக்கமாக நான் எனது மாணவர்களுடன் பள்ளியில் இது மாதிரியான மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கலை படைப்புகளை செய்வேன். ஆனால் தொற்று காரணமாக தொலைதூர கல்வி முறை நடைபெற்று வந்ததால், ஆன்லைன் வகுப்புகளில் எனது கலைப்படைப்புகளை நான் அவர்களுக்குக் காண்பித்தேன் என்றார்.

“நான் அமீரகத்தை நேசிக்கிறேன், ஏனென்றால் இது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சகிப்புத்தன்மையுள்ள நாடு, இது அவர்களின் இனம், மதம், அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், உலகம் முழுவதிலுமிருந்து மக்களை அரவணைத்து கொள்கிறது. அமீரகம் நீண்ட காலம் வாழ வேண்டும்”என்றார்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ரஷிதாவின் 4 கலை பொருட்கள்..

  • அமீரக கொடியில் உள்ள வண்ணங்களில் 30X24 அங்குல அளவில் 2,500 கையால் செய்யப்பட்ட சாடின் ரிப்பன் ரோஜாக்களால் ஆன இதயம்.
  • ஆயிரக்கணக்கான தானிய அளவுள்ள மர மற்றும் கண்ணாடி துண்டுகள், மணிகள் மற்றும் பொத்தான்களால் ஆன ‘ஸ்பிரிட் ஆஃப் தி யூனியன்’ என்ற தலைப்பில் 35 X 25 அங்குல ஃபிரேமில் அமீரக கொடியின் பின்னணியில் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுடன் மேலும் ஆறு ஆட்சியாளர்களும் ஒன்றாக இருக்கும் படைப்பு
  • 18X25 அங்குல ஃபிரேமில் 1,500 காகித கீற்றுகள் ஒன்றாக உருட்டப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. இது ஆர்ட் ஆஃப் பேப்பர் குயிலிங் என்று அழைக்கப்படுகிறது. அமீரக தேச தந்தை, மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தானின் தனித்துவமான உருவப்படம் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அமீரக கொடி வண்ணங்களின் 7,000 மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய மர அமீரக வரைபட ஃபிரேம்.