ஷார்ஜா ஹெரிடேஜ் டேஸ் (Sharjah Heritage Days) எனப்படும் பாரம்பரியத் திருவிழா இன்று ஷார்ஜாவின் ஹெரிடேஜ் சிட்டியில் துவங்க இருக்கிறது. அமீரகம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பாரம்பரியம் மிக்க உணவுகள், உடைகள், கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நடனம் என 500 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
ஷார்ஜா பாரம்பரிய நிறுவனம் (Sharjah Institute for Heritage) நடத்தும் இந்த நிகழ்ச்சியின் மையக் கருவாக பாரம்பரியம் எங்களை ஒன்றிணைக்கிறது எனப் பொருள்படும் “Cultural heritage gathers us” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 29 நாடுகள் பங்கேற்கும் இத்திருவிழாவில் இந்த வருடம் மாண்டிநீக்ரோ குடியரசு கவுரவ விருந்தினராகவும், கஜகஸ்தான் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ள இருக்கிறது.
மார்ச் 20 முதல் ஏப்ரல் 10 வரையிலான மூன்று வார காலத்திற்கு நடைபெறும் இந்தத் திருவிழா வாரநாட்களில் மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையிலும் வார இறுதி நாட்களில் இரவு முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் நாடுகள்: பெலாரஸ், மாசிடோனியா, பாஷ்கார்டோஸ்தான், தஜிகிஸ்தான், பல்கேரியா, சவுதி அரேபியா, ஓமான், குவைத், பஹ்ரைன், மாலத்தீவுகள், யேமன், எகிப்து, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சூடான், லெபனான், மொராக்கோ, பாலஸ்தீனம், அல்ஜீரியா, சிரியா, கென்யா, துனிசியா, நெதர்லாந்து, மொரீட்டியா , ஈராக் மற்றும் இந்தியா.

பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 28 வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என ஷார்ஜா பாரம்பரிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் வெப்ப பரிசோதனை ஸ்கேனர்கள், சமூக விலகலை வலியுறுத்தும் போஸ்டர்கள், முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர் கையிருப்பு, நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நாள்தோறும் சுத்திகரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்தபிறகும் 30 நிமிடத்திற்கு அந்த இடம் சுத்திகரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் 3000 பேரும் வார இறுதி நாட்களில் 6000 பேரும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.