அமெரிக்காவின் தலைமையில் அமீரகம் – இஸ்ரேல் இடையே ஆப்ரகாம் அமைதி ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கையெழுத்தானது. இதனையடுத்து இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் நேற்று தொலைபேசி வாயிலாக இஸ்ரேலின் ஜனாதிபதி திரு.ரிவ்லின் அவர்களிடம் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பேசினார்.
இருநாட்டு உறவுகள் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகளுக்கு இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் உரையாடினர்.
அமீரகம் – இஸ்ரேல் இடையேயான உறவின் புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கும் ஆப்ரகாம் ஒப்பந்தத்தில் இணைந்ததற்கு இஸ்ரேலிய ஜனாதிபதி இளவரசரிடம் நன்றி தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவித்த அல் நஹ்யான், பிராந்தியத்தில் நிலையான ஆட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக அமைதி ஒப்பந்தத்தில் இணைந்து ஒத்துழைப்பு அளித்ததற்கு அமீரகம் சார்பில் நன்றி தெரிவித்தார்.
இருநாட்டுத் தலைவர்களும் தங்களது நாட்டிற்கு வருகை புரியுமாறு இரு நாட்டின் சார்பிலும் கோரிக்கை வைத்தனர்.