UAE Tamil Web

முக்கியச் செய்தி: 2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட அபுதாபி இளவரசர் மற்றும் இஸ்ரேல் அதிபர்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமீரகம் – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் இணைந்ததற்காக அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடைய பெயரும் இஸ்ரேலிய அதிபர் திரு. பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயரும் 2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

1998 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான வடக்கு அயர்லாந்தின் முதல் மந்திரி லார்ட் டேவிட் ட்ரிம்லே (David Trimble) தான் அபுதாபி இளவரசரையும் இஸ்ரேல் அதிபரையும் 2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

வடக்கு அயர்லாந்தில் டேவிட் எடுத்த அமைதி நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அவ்விருதிற்குப் பிறரை பரிந்துரை செய்யும் நடைமுறை இருப்பதால் டேவிட்  தற்போது அமீரக மற்றும் இஸ்ரேல் தலைவர்களின் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறார் என இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

அமைதி ஒப்பந்தம்

அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் – அமீரகம் இடையே எட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க உறவுகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்படி, இஸ்ரேலில் அமீரக தூதரகமும், அமீரகத்தில் இஸ்ரேலிய தூதரகமும் ஏற்படுத்தப்படும். வர்த்தகம், நேரடி விமானப் போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து விரிவாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

பரிந்துரை

மக்கள் குழுக்கள், அமைப்புகள், தேசிய சட்ட நிபுணர்கள், மாநில தலைவர்கள், ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள், குறிப்பிட்ட சர்வதேச கல்விக்கூடங்களில் சில துறைகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உகந்த நபர்களின் பெயர்களை பரிந்துரை செய்யலாம்.

அமைதிக்கான நோபல் பரிசு எப்படி வழங்கப்படுகிறது?

நார்வே நாட்டின் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேர்கொண்ட குழு அடுத்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் 2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய நபர்களைத் தேர்ந்தெடுக்கும்.

அடுத்தாண்டிற்கான நோபல் பரிசு பரிந்துரைகள் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 318 பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் இருந்து ஐக்கிய நாடுகள் அவையின் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு பரிசானது வழங்கப்பட்டது.

இந்த வருடத்திற்கான நோபல் பரிசிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sheikh Mohamed bin Zayed Al Nahyan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap