அமீரகம் 2020: எதை நோக்கி பயணம் செல்கிறது?

UAE Theme for 2020

ஒரு நாட்டை ஆளும் அரசானது, அந்த நாடு எதை நோக்கி செல்கிறது என்பதை கணக்கிடுவது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிக்கின்றது. அமீரக அரசு இந்த வேலையை மிகச்சிறப்பாக செய்து வருகின்றது என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவர். அதற்கு எடுத்துக்காட்டாக, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அமீரக அரசு ஒரு குறிப்பிட்ட தீம் ஒன்றை ஒவ்வொரு ஆண்டும் முடிவு செய்து, அந்த ஆண்டு முழுவதும் அதை நோக்கியே பயணிக்கும்.

அதாவது 2016 ஆம் ஆண்டு “படிக்கும் ஆண்டு (Year of Reading)” எனவும், 2017- “கொடுக்கும் ஆண்டு (Year of Giving)” எனவும், 2018- “சயீத்தின் ஆண்டு (Year of ZAYED)” எனவும், 2019- “சகிப்புத்தன்மையின் ஆண்டு (Year of Tolerance)” என்ற நோக்கத்தை கொண்டு பயணம் செய்தது. இதற்கு சான்றாக சகிப்புத்தன்மையின் ஆண்டான 2019-ல் மத வேறுபாடுகளையும் தாண்டி ஹிந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவதற்காக இடம் & ஒப்புதல் வழங்கியது மற்றும் பல சகிப்புத்தன்மையை குறிக்கும் செயல்களை அமீரக அரசு வெற்றிகரமாக செய்துள்ளது. இதை போன்று வரும் ஆண்டான 2020-ல் அமீரகம் எதை நோக்கி பயணம் செய்ய இருக்கின்றது என்பதை தான் இந்த பதிவில் விளக்கமாக நாம் காண இருக்கின்றோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் இளவரசர், அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2020-ஆம் ஆண்டை அடுத்த 50 ஆண்டுகளுக்கான தயாரிப்புகளின் ஆண்டாக கடந்த சனிக்கிழமை (14.12.2019) அறிவித்துள்ளார்கள்.

இதுபற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் , “2020: அடுத்த 50 ஐ நோக்கி என்று அறிவித்ததன் மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வாழ்க்கையை வடிவமைப்பதிலும், 2021 ஆம் ஆண்டு நாட்டின் பொன்விழா கொண்டாட்டங்களுக்குத் தயாராவதிலும் மேற்கொள்ளும் பணிகள் வரும் 2020 ஆம் ஆண்டிலேயே தொடங்கும்” எனக் கூறுகிறார்.


இதுபற்றி மேலும் அவர் கூறுகையில் ,”2020-ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் “திருப்புமுனையாக” இருக்கும். அடுத்த ஐம்பது ஆண்டுகளில், எண்ணெய் உற்பத்தியில் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னோங்கி நிற்கும் வகையில் நாங்கள் தயார் செய்வோம். புதுமையான விஷயங்கள் மற்றும் படைப்பாற்றலின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்” என்கிறார்.

மேலும், “எங்கள் மக்களின் விருப்பம் மற்றும் ஒற்றுமையுடன், 2071 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நூற்றாண்டு விழாவில், உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக அமீரகத்தை அறிவிக்க வேண்டும் என்னும் எங்கள் இலக்கை அடைய நாங்கள் அயராது உழைப்போம்.” என்று நிறைவு செய்தார்.

Loading...