UAE Tamil Web

டிக்டாக்கில் இணைந்த துபாய் ஆட்சியாளர் – 91,000 லைக்ஸ்களை அள்ளியது முதல் வீடியோ..!

sheikh mohammed tik tok

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பிரபல சமூக வலைத்தளமான டிக்டாக்கில் இன்று இணைந்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட முதல் வீடியோ (இதை எழுதிய நேரப்படி) 91,000 லைக்ஸ், 18,000 கமெண்ட்கள், 2,787 ஷேர்கள் என டிக்டாக்கையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

சமூக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இடையே நேர்மறையான எண்ணங்களை தனது 50 வருட பொது வாழ்க்கையின் துணைகொண்டு பரப்பும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷேக் முகமது வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” டிக்டாக் செயலியை 800 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள் அதிகம் விரும்பும் தலங்களில் நாங்களும் இருப்போம். அரபுலகம் கூறும் நற்செயல்களை வலுப்படுத்த நாங்கள் நினைக்கிறோம். இளைய மக்களின் குரல்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர்களிடம் எங்களது கதைகளைக் கொண்டு சேர்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் வீடியோ

டிக்டாக்கில் வெளியிடப்பட்ட ஷேக் முகமது அவர்களின் முதல் வீடியோவில் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அவரே ஒரு கதையினை கூறியிருக்கிறார்.

“ஆப்பிரிக்காவில் அதிகாலையில் விழிக்கும் ஒரு மான், அங்கிருக்கும் சிங்கங்களை விட வேகமாக ஓடத் தயாராக வேண்டும். அப்போதுதான் அது அன்றைக்கு உயிர்தப்ப முடியும். அதேபோல, ஆப்பிரிக்க சிங்கம் அதிகாலையிலேயே ஒரு மானை வீழ்த்தும் வேகத்தில் இயங்க வேண்டும். இல்லையெனில் அது அன்றைக்கு முழுவதும் பட்டினியில் கிடக்கவேண்டிவரும்.

அமீரகத்தில் அல்லது துபாயில் நீங்கள் சிங்கமாகவோ அல்லது மானாகவோ இருக்கலாம். அது முக்கியமில்லை. ஆனால் நீங்கள் அதிகாலையிலேயே உங்களுடைய கனவுகளைத் துரத்த தயாராகவேண்டும் என்பதே பொருட்படுத்தத்தக்கது” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷேக் முகமது வெளியிட்ட இரண்டாவது வீடியோவில் முதல் நிலை வீரர்கள் மற்றும் குழுவாக பயணித்து தடைகளை தகர்த்தெறிதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

sheikh mohammed tik tok
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap