அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது.
“அனைவரையும் காக்கும்படியும், பாதிக்கப்பட்டவர்களை நலம்பெறச் செய்யவும் நாம் கடவுளிடம் பிரார்த்திப்போம்” என ஷேக் முகமது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது தோளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
أثناء تلقي لقاح فيروس كورونا.. نسأل الله أن يحفظ الجميع ويعافي الجميع .. ونشيد بفرق العمل التي عملت جاهدة لتكون بلادنا من أوائل الدول عالمياً التي تحصل على لقاح لهذا الفيروس .. والمستقبل دائما أفضل وأجمل في دولة الإمارات .. pic.twitter.com/LXdOJqhMYa
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 3, 2020
“கொரோனா தடுப்பூசி பெறும் உலகின் முதல் நாடாக அமீரகத்தை உருவாக்க கடினமாக உழைத்துவரும் அனைத்து குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். அமீரகத்தின் எதிர்காலம் மேம்பட்டதாகவும் அழகானதாகவும் இருக்கும்” என ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் நடைபெற்றுவந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது.
இதன் நீட்சியாக அபுதாபி பள்ளி ஆசிரியர்கள், ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றாம் கட்ட சோதனையை அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொண்டுவருகின்றன.
அமீரகத்தின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்தானது அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.