UAE Tamil Web

“GCC மாநாட்டிற்கு வருகைதாருங்கள்” – அமீரக ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்த சவூதி அரசர்….!

Sheikh Mohammed GCC

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் ஜனவரி 5, 2020 ஆம் தேதி 41 வது கல்ஃப் கோ-ஆப்பரேஷன் கவுன்சில் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்குமாறு சவூதி அரேபியாவின் அரசரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் (Salman bin Abdulaziz Al Saud) அவர்கள் அமீரகத்தின் தலைவரான ஷேக் கலீஃபா அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

- Advertisment -

ஷேக் கலீஃபாவிற்குப் பதிலாக அழைப்பை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், GCC ன் பொதுச் செயலாளரான நயிஃப் ஃபலா அல் ஹஜ்ரஃப் (Nayef Falah Al Hajraf) அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து ஹஜ்ரஃப் பேசுகையில்,”சவூதி அரசரின் அழைப்பிதழை அமீரகத்தின் தலைவரிடம் ஒப்படைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

“இக்கட்டான இந்த சூழ்நிலையில் GCC யின் உச்சிமாநாட்டை நடத்த வளைகுடா நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிப்பது மற்றும் வளைகுடா வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கவுன்சில் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவை GCC யின் வலிமையை சுட்டிக்காட்டுகிறது” என ஹஜ்ரஃப்  குறிப்பிட்டார்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உறுப்பினர்களிடையே வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலான கூட்டு நடவடிக்கை அதிகமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வளைகுடா மக்களின் இலக்குகளைப் பூர்த்தி செய்வது, இணக்கத்தை அதிகரிப்பது, உறுப்பு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை அதிகரிப்பது போன்றவை உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட இருப்பதாக ஹஜ்ரஃப் தெரிவித்தார்.

கவுன்சிலின் இணையதளத்தில் இந்த மாநாட்டின் முக்கிய மூன்று குறிக்கோள்களாக சுட்டப்பட்டுள்ளவை; மக்கள், கிரகம் மற்றும் செழிப்பு.

“ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலமாக மானுடத்தை மலரச் செய்யவும் கிரகத்தை மேலும் வளமையாக்கவும் முயற்சிப்பதன் மூலமாக வலுவான, நீடித்த பொருளாதார மீட்சியை ஏற்படுத்த முடியும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.