அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக அமீரகம் வந்துள்ள இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் துபாய் ஆட்சியாளரை சந்தித்தார். அப்போது இந்தியப் பிரதமரின் கடிதத்தை ஆட்சியாளரிடம் ஒப்படைத்தார்.
.@HHShkMohd receives a message from the Prime Minister of India @narendramodi during His Highness’s reception of India’s Minister of External Affairs, who is currently visiting the #UAE. pic.twitter.com/dtyCWErW0H
— Dubai Media Office (@DXBMediaOffice) November 29, 2020
ஆட்சியாளருக்கு எழுதிய கடிதத்தில் மோடி,” கொரோனாவிற்கு எதிரான போரில் திறம்பட செயல்பட்டுவரும் அமீரகத்திற்கு வாழ்த்துக்கள். இந்திய சமூகத்தினரின் மீது அமீரக அரசு காட்டும் அக்கறைக்கு நன்றி. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் அமீரகவாழ் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகள் குறித்து துபாய் ஆட்சியாளரும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
முன்னதாக இந்திய அமைச்சர், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களையும் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.