UAE Tamil Web

“பசி என்னும் சொல்கூட இருக்கக்கூடாது” – கஷ்டப்படும் மக்களுக்காக 10 கோடி உணவுகளை வழங்குவதாக துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த ரமலான் காலத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த பின்தங்கிய குடும்பங்களுக்கு 100 மில்லியன் உணவுகளை வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உலகளாவிய திட்டங்கள் (MBRGI) என்னும் அமைப்பின் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. “இனம், நிறம், மதம் கடந்து வறுமையின் பிடியில் தவிக்கும் உலகத்து மக்களுக்கு உதவும் அமீரகத்தின் பண்பை வெளிப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ள இந்த கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தினைக் கணக்கில்கொண்டு இந்த மனிதாபிமான திட்டம் மேற்கொள்ளப்படுகிறது” என MBRGI ன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்கும் வகையில் கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட 10 மில்லியன் உணவுத் திட்டம் தற்போது 100 மில்லியன் திட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.

“வருடம் முழுவதும் நீடித்த இத்திட்டம் உலகளாவிய வளர்ச்சியில் அமீரகத்தினை முன்னிலைப்படுத்துகிறது. ஈகை, இரக்கம் ஆகியவற்றை அடிநாதமாகக்கொண்டே இந்த 100 மில்லியன் உணவுத் திட்டம் இயங்கிவருகிறது”என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மனிதாபிமான மற்றும் தொண்டு ஸ்தாபனம், பிராந்திய வலையமைப்பிற்கான உணவு வங்கி, ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம், ஐநாவில் உள்ள மனிதாபிமான அமைப்புகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கூட்டாட்சி மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.