UAE Tamil Web

அமீரகத்தில் நாளை துவங்குகிறது பிரம்மாண்ட ஷேக் சயீத் திருவிழா – நீங்கள் தெரிந்தகொள்ள வேண்டிய அனைத்தும்..!

Sheikh Zayed Festival

அமீரகத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடைய பெயரில் ஆண்டுதோறும் அபுதாபியில் ஷேக் சயீத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அதன்படி இந்த வருட ஷேக் சயீத் திருவிழா நாளை துவங்கி ஏப்ரல் 1, 2022 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது.

4,500 க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்வுகள், 650 நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான 130 க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகள் என இந்தாண்டு திருவிழா களைகட்ட இருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து 22,500 க்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு சர்வதேச நாட்டுப்புறக் கலை அரங்குகள், கலாச்சார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், நீர் மற்றும் லேசர் நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள், கார் ஷோ, பனி சறுக்கு வளையம், பளபளக்கும் தோட்டம் என அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இந்த வருட திருவிழா அமைய இருக்கிறது.

திருவிழா நடைபெறும் அல் வத்பா இடத்திற்குச் செல்ல, அபுதாபி பிரதான பேருந்து நிலையம் (மதியம் 3 மணி), கோ-ஆப்பரேட்டிவ் அசோசியேஷன் (பிற்பகல் 3.30) மற்றும் பனி யாஸ் பேருந்து நிலையம் (மாலை 4 மணி) ஆகியவற்றிலிருந்து 30 நிமிட இடைவெளியில் இலவச வழக்கமான பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.

நுழைவுக் கட்டணத்தைப் பொறுத்தவரை, ஒரு நபருக்கு 5 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழா பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள், திருவிழா பணியாளர்களின் அவ்வப்போது சோதனைகள் மூலம் சமூக விலகல் அறிவுறுத்தல்கள், முகக்கவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பார்வையாளர்களும் எல்லா நேரங்களிலும் முகக்கவசத்தை அணிய வேண்டும், பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டசைக் காட்டுவதை உறுதிசெய்ய வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் நேரம்: வார நாட்களில் மாலை 4 மணிமுதல் நள்ளிரவு வரையிலும் வியாழன், வெள்ளி மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் மாலை 4 மணிமுதல் அதிகாலை 1 மணிவரையிலும் திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sheikh Zayed Festival
15 Shares
Share via
Copy link