UAE Tamil Web

நேருக்கு நேர் மோதிய லாரி; துபாயில் பயங்கர விபத்து – 8 பேர் படுகாயம்..!

Accident

துபாயில் கடந்த 48 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை இயக்குனர் கர்னல் ஜுமா பின் சுவைதான் இதுகுறித்துப் பேசுகையில்,”வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாதது, அதிவேகம் மற்றும் கண்ட இடங்களில் சாலையை கடத்தல் ஆகிய காரணங்களினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளன” என்றார்.

“செவ்வாய்க்கிழமை ஷேக் சயீத் சாலைக்குச் செல்லும் அல் யாலயிஸ் சாலையில் நடைபெற்ற முதல் விபத்தில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியிருக்கிறது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என சுவைதான் தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு நியமிக்கப்படாத இடத்தில் சாலையைக் கடந்த நபரின் மீது மினிபஸ் மோதியதால் அவர் படுகாயமடைந்திருக்கிறார்.

அல் கைல் சாலையில் துபாய் கால்வாய் மேம்பாலத்திற்கு அருகே தேரா செல்லும் வழியில் ஏற்பட்ட மூன்றாவது விபத்தில் பைக்கும் காரும் மோதியதில், பைக்கில் சென்றவர் காயமடைந்தார். இரு வாகனங்களுக்கும் இடையே போதிய இடைவெளி இல்லாததே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

புதன்கிழமையன்று ஷேக் சயீத் சாலையில் மரினா மால் நுழைவுப் பகுதியில் லாரி மீது பைக் மோதியதில் அதை ஓட்டிவந்தவர் படுகாயமடைந்தார். மாலிற்குள் நுழைய லாரியை பின்னால் இயக்கிய போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

ஷார்ஜா செல்லும் வழியில் பிசினஸ் பே மேம்பாலத்திற்கு அருகே இரு லாரிகள் நேருக்குநேர் மோதியதில் ஒரு டிரைவர் லேசான காயத்துடன் தப்பித்திருக்கிறார். ஒரு லாரி கடுமையாக சேதமடைந்திருக்கிறது.

மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செயல்படும்படியும் அதிவேகத்தைத் தவிர்க்கும்படியும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap