39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இன்று இந்தியாவிற்கு 2 சிறப்பு விமானங்கள் இயக்கம்!

abudhabi airport

கொரோனோ பாதிப்பால் அமீரகத்தில் தவித்துவரும் இந்தியர்களை தாயகம் அழைத்துச் செல்ல இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கிவருகிறது. ஏற்கனவே ஐந்து சிறப்பு விமானங்கள் அமீரகம் – இந்தியா இடையில் இயக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று மேலும் இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து தலா ஒரு விமானம் இன்று இந்தியாவிற்கு புறப்பட உள்ளது. இதன்மூலமாக 300 இந்தியர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள்.

கொச்சிக்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 454 விமானம் துபாயிலிருந்தும், அபுதாபியில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் ஹைதராபாத்திற்கும் செல்ல இருக்கிறது. துபாயிலிருந்து கிளம்ப இருக்கும் விமானத்தில் அதிக அளவிலான கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள், கொரோனோ பாதிப்பால் வேலையிழந்தோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தியா திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்த துபாயிலிருக்கும்  இந்திய துணைத் தூதரக தலைமை அதிகாரி,” இன்று 30 கர்ப்பிணிகள் துபாயிலிருந்து இந்தியா திரும்புகின்றனர். துபாய் சுகாதாரத்துறை மற்றும் விமானநிலைய ஊழியர்களின்  உதவியுடன் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது”. எனத் தெரிவித்தார்.

travelers airport
Image Credit: khaleejtimes

“கேரளாவில் வசிக்கும் என்னுடைய குடும்பத்தைக் காண நான் ஆவலாக இருக்கிறேன். இங்கே தனிமையில் தவித்த எனக்கு கடைசி நிமிடத்தில் பயணத்திற்கான அனுமதி கிடைத்திருக்கிறது” என்றார் நிறைமாத கர்ப்பிணியான சுமா மனோகரன்.

காத்திருப்புப் பட்டியலில் இன்னும் 11 பெண்கள் இருக்கிறார்கள். குடியேற்ற விதிமுறைகள் அல்லது குறித்த நேரத்தில் பயணத்தைத் தொடர முடியாமல் போகும் பிரயாணிகளின்  இருக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

35 வார கர்ப்பிணியான மீனு வின்சென்ட் கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும் போது,” நான் இங்கே தனியாக வசித்து வருகிறேன். எனது கணவர் இந்தியாவில் இருக்கிறார். இப்பயணத்தின் மூலமாக நாங்கள் திட்டமிட்டபடி என்னுடைய பிரசவம் இந்தியாவில் நடக்க இருக்கிறது. என்னைப் பிரிந்துவாடும் குடும்பத்தினரைக் காணச் செல்கிறேன்” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

flight
Image Credits- Khaleej Times

கடந்த மே மாத துவக்கத்தில் அமீரகத்திற்கு வந்திருந்த தெரசா ஜோசப் இந்த சிறப்பு விமானத்தின் மூலமாக தனது சொந்த ஊரான கோட்டயத்திற்கு திரும்ப இருக்கிறார். இன்றைய பயணிகளிலேயே தெரசா தான் வயதானவர். 90 வயதான தெரசா தனது மகன் ஜாய் ஜோசப்புடன் (61) இந்தியாவிற்கு பயணிக்க இருக்கிறார். இதுகுறித்து ஜோசப் பேசுகையில் “நாங்கள் ஒரு மாத விசாவில் சுற்றுலாவுக்காக அமீரகம் வந்தோம். கொரோனோ பாதிப்பு காரணமாக இங்கேயே தங்கும்படி சூழ்நிலை அமைந்துவிட்டது. இப்போது வீட்டிற்குத் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். இன்றைய சிறப்பு விமானத்தில் பயணிப்பவர்களின் பட்டியலில் தெரசாவின் பெயர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!