34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட உள்ள தனி விமானம் – தொடர்பு எண் உள்ளே..!

india international flight

கொரோனா தன் கோர முகத்தை உலகமெங்கிலும் காட்டிவரும் இந்த சூழ்நிலையில் வேலைவாய்ப்பிற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று சிக்கிக்கொண்டவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. குறிப்பாக அமீரகத்தில் வசிக்கும் தமிழக மக்களில் பலர் வேலை இழந்து, இருக்க இடமின்றி, பசியிலும், வறுமையிலும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துச்செல்ல இந்திய அரசு வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த சிறப்பு திட்டமானது நான்காம் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்திற்கு இதுவரையில் 13 சிறப்பு விமானங்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் இயக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் அமீரக வாழ் தமிழ் மக்களில் பலர் தங்களது வேலைகளையும் இழந்து, நாடு திரும்ப வழியும் இல்லாமல் தவித்துவருகிறார்கள். சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் அமீரகத்திலிருந்து தனி விமானங்களை இந்தியாவிற்கு இயக்க இந்திய அரசு சமீபத்தில் அனுமதியளித்திருந்தது. ஆனாலும் தமிழகத்திற்கு தனி விமானங்களை இயக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

எப்படியாவது தாய் மண்ணிற்கு சென்று விட மாட்டோமா? இந்த கஷ்டங்கள் என்றாவது ஒருநாள் காணாமல் போகாதா? வயிற்றில் கனன்று எரியும் பசியின் தீ ஒரு வேளையாவது அணையாதா? என அமீரகத்தில் காத்துக்கிடந்த மக்களுக்கான குரலாய் ஒலித்து வருகிறார் ஷார்ஜா வாழ் தமிழரான திரு. மகாதேவன்.

AKM

தனது நண்பர்களை ஒருங்கிணைத்து அமீரகத்தில் கஷ்டப்படும் தமிழர்களை தனி விமானம் மூலமாக தமிழகத்திற்கு அனுப்பிவருகிறார்  49 வயதான மகாதேவன். தமிழகத்திற்கான தனி விமான இயக்கம் குறித்து நமது நிருபரிடம் அவர் அளித்த பேட்டியில்,” கொரோனா காரணமாக அமீரகத்தில் தமிழர்கள் படும் கஷ்டங்கள் அதிகமாகிவிட்டன. சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் பலர் இங்கே கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக சமீபத்தில் தனி விமானம் ஒன்றினை எனது நண்பர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தேன். இந்திய அரசு மற்றும் அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றிடம் இருந்து ஒப்புதலைப் பெற்று 350 பயணிகளுடன் மதுரைக்கு ஒரு தனி விமானத்தை இயக்கியுள்ளோம். கூடிய விரைவில் திருச்சிக்கு தனி விமானங்களை இயக்க இருக்கிறோம்” என்றார்.

திருச்சிக்கு தனி விமானங்கள்!!

தனது நண்பர்களுடன் இணைந்து, மகாதேவன் திருச்சிக்கு இயக்க இருக்கும் தனி விமானத்தில் பயணிக்க ஒரு நபருக்கு 1975 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணத்தை செலுத்துவதன் மூலம் கீழ்கண்ட சேவைகளை பயணிகள் பெறலாம் என ஏற்பாட்டாளர் குழு அறிவித்திருகிறது.

  • விமான டிக்கெட்.
  • துபாயில் ஒரு கொரோனா பரிசோதனை.
  • ஹோட்டலில் 7 நாட்கள் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளுவதற்கான தங்கும் இடம்.
  • திருச்சியில் 2 கொரோனா பரிசோதனைகள்.
  • மூன்று வேளை உணவு.
  • தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகள்.
  • மருத்துவ மையங்களுக்கு செல்ல வாகன வசதி.

பசி என்பதே இருக்க கூடாது சார்….

கொரோனா காரணமாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் பட்டினியாகக் கிடந்த ஆயிரக்கணக்கானோருக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார் மகாதேவன். இதுகுறித்து அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது “சாப்பாடு இல்லாம யாரும் கஷ்டப்படக் கூடாது. பசி என்பதே இருக்க கூடாது சார்” என்றார் தீர்க்கமாக.

ஷார்ஜாவில் உணவின்றித் தவித்த 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு வேண்டிய மளிகைப் பொருட்களை நண்பர்களுடன் இணைந்து வழங்கியுள்ளார் மகாதேவன். தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்தி பல இடங்களில் இப்படியான உதவிகளை செய்துவருகிறார் இவர். சமூகத்தின் அற வீழ்ச்சியின் எல்லை தனி மனிதனின் பசியாறுவதில் தான் இருக்கிறது. சக மனிதனின் துயரைத் தன் துயராய் பார்க்கும் மகாதேவனிடம் நாடு திரும்பும் மக்களுக்கு உதவும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? எனக் கேட்டோம்.

அதற்கு அவர், “வந்தே பாரத் திட்டத்தில் நாடு திரும்ப விண்ணப்பித்துவிட்டு, விமானத்தில் பயணிக்க அனுமதி கிடைக்காமல் காத்திருந்த பலருக்கு, சிறப்பு விமானத்தில் பயணிக்க சரியான முறையில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுரை கூறினேன். அவர்களது விண்ணப்பங்களை நானே சரிபார்த்து பின்னர் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளையும் கூறிவருகிறேன்” என்றார்.

AKM 2

கர்ப்பிணிகள், வயதானோர், குடும்பங்களில் ஏற்பட்ட இறப்பு காரணமாக அவசரமாக நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருந்தவர்கள் என சுமார் 600 இந்தியர்கள் தனி விமானங்கள் மற்றும் இந்திய அரசினால் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் மூலமாக தாயகம் திரும்ப மகாதேவன் உதவியுள்ளார்.

அமீரகத்திலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும். உள்நுழைந்த பின்னர் உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ற தவல்களை வழங்கி பின்னர் படிவத்தை சமர்ப்பியுங்கள்.

பயணம் குறித்த தொடர்பிற்கு,

மகாதேவன் : +971 56 680 6824

ஸ்டாலின் : 0559674720

இதையும் படிங்க.!