அக்டோபர் 1 ஆம் தேதி உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 துவங்க இருக்கிறது. இதனையடுத்து எக்ஸ்போவிற்கான சிறப்பு பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 20 திர்ஹம்ஸ் விலையில் கிடைக்கும் இந்த மஞ்சள் நிற பாஸ்போர்ட்டில் 50 பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
எக்ஸ்போவில் இடம்பெறும் மொத்தமுள்ள 200 பெவிலியன்களுக்கு நீங்கள் செல்லும் போதும் உங்களுடைய பாஸ்போர்டில் அந்நாட்டுடைய சீல் வைக்கப்படும். அதே போல, பாஸ்போர்ட் நம்பர், பயனாளரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படம் என நிஜ பாஸ்போர்ட்டில் இருக்கும் அத்தனை பாதுகாப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே போலி பாஸ்போர்ட்டிற்கு வாய்ப்பில்லை.
அமீரக எக்ஸ்போ பாஸ்போர்ட்டில் அமீரக பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக துபாயின் ஸ்கைலைன் உள்ளிட்டட முக்கிய இடங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. போலவே, அமீரகத்தின் மிஷன் இம்பாசிபிள், அலிஃப் மற்றும் டெர்ரா ஆகிய பெவிலியங்களின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துபாய் எக்ஸ்போவின் ஆபரணமாகக் கருதப்படும் அல் வாசில் பிளாசாவின் ஓவியங்களும் பாஸ்போர்ட்டில் உள்ளது.
அமீரகத்தின் ஸ்தாபன தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் (Sheikh Zayed bin Sultan Al Nahyan) அவர்களுடைய 1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை அமீரக பாஸ்போர்ட்டின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், அமீரகம் உருவான நாளான டிசம்பர் 2 ஆம் தேதி, பார்வையாளர்களுக்கு அமீரகத்தின் 50 வது ஆண்டுவிழாவின் சிறப்பு முத்திரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு மாண்ட்ரியால் நகரில் நடந்த எக்ஸ்போவில் முதன்முறையாக எக்ஸ்போ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தங்களது வாழ்வில் எப்போதும் இந்த அருமையான பயணத்தை நினைவுகூரும் நினைவுச் சின்னமாக இந்த பாஸ்போர்ட்டைக் கருதுகின்றனர்.