மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தினந்தோறும் உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் சேவை வழங்கி வருகிறது.
முன்னதாக வெளிநாட்டு சேவையாக அமீரகத்தின் துபாய், ஷார்ஜா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுளுக்கு விமான போக்குவரத்து நடைபெற்று வந்தது.
பின்னர் கொரானோ பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டு சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் மீண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகளில் இந்திய அரசு சில தளர்வுகள் அளிக்க முடிவுசெய்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, நேற்று புதன்கிழமை முதல் மதுரையிலிருந்து SPICEJET விமானம் (இந்திய நேரப்படி) காலை 10:45 மணிக்கு புறப்பட்டு 1:45 மணிக்கு துபாய்க்கு வந்தடையும். அதுபோன்று துபாயிலிருந்து அதிகாலை 2:25 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த விமான போக்குவரத்து தினசரி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.