UAE Tamil Web

“இவர்களை மட்டுமாவது அமீரகத்திற்குள் நுழைய அனுமதியுங்கள்” – அமீரக அரசிற்கு கோரிக்கை வைக்கும் இந்தியர்கள்..!

Airport

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் அமீரகத்திற்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் கொரோனா. இதனால் அமீரகத்தில் வசித்து, விடுமுறை மற்றும் சொந்தக் காரணங்களுக்காக தாயகத்திற்குச் சென்ற இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீண்டும் அமீரகம் திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சிக்கிக்கொண்ட அமீரக வாழ் மக்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இதனிடையே முன்களப் பணியாளர்களை மீண்டும் அமீரகம் திரும்ப அனுமதிக்கவேண்டும் எனவும், வேண்டுமானால் வருகையின் போது தனிமைப்படுத்திக்கொள்தல், அமீரகம் திரும்புவோர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்பதுபோன்ற விதிமுறைகளை விதிக்கலாம் என இவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

துபாயின் முன்னணி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்துவரும் சந்தியா கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியா சென்றிருக்கிறார். பயணத் தடை காரணமாக அவரால் அமீரகம் திரும்ப முடியவில்லை. இதுகுறித்துப் பேசியவர்,”கொரோனா இரண்டாது அலையின்போது நான் துபாயில் இருந்தேன். அனைவரிடமும் நான் ஒரு முன்களப் பணியாளர் எனப் பெருமையாக சொல்லிக்கொள்வேன். என்னைப்போன்ற பணியாளர்கள் அமீரகம் திரும்ப அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றார்.

அமீரகத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தே வேளையில், முன்களப் பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக செவிலியர்கள். கடுமையான நேரங்களில் அவர்களது சேவை அளப்பரியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவுடனான போராட்டத்தில் பங்குபெற்றவளான நான், என்னுடைய இந்த நேர்மையான கோரிக்கையை இந்தியாவில் சிக்கிக்கொண்ட செவிலியர்களின் சார்பாக அமீரக அரசிடம் முன்வைக்கிறேன்” என சந்தியா தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அமீரகம் திரும்பவில்லை எனில் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் சிக்கிக்கொண்ட மற்றொரு அமீரக வாழ் நபரான சஞ்சீவ் குமார், வேலைக்கான அனுமதி பெற்று, தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை மீண்டும் அமீரகம் வர அமீரக அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவிக்கிறார்.

மருத்துவ மையத்தில் பணிபுரியும் சஞ்சீவ் தனது கொரோனா தடுப்பூசியை துபாயில் எடுத்திருக்கிறார். மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில்,”வீட்டில் இருந்தால் எங்களுடைய தேவைகளை எங்ஙனம் நிறைவேற்றுவது? எங்களுடைய சம்பளத்தை நம்பியே எங்களது குடும்பம் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் வேலையிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம்” என்றார்.

இதேபோல வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட டொமொனிகா எனும் பெண்மணி, அமீரக ரெசிடென்ட் விசா வைத்திருந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை அமீரகம் திரும்ப அரசு முன்வரவேண்டும் என்றார்.

தனிமைப்படுத்திக்கொள்தல் மற்றும் பரிசோதனை போன்ற விதிமுறைகளை அரசு விதிக்கலாம் என அவர் பரிந்துரைந்திருக்கிறார். இப்படி இந்தியாவில் தவிக்கும் பல அமீரக வாழ் மக்கள் மீண்டும் அமீரகம் வர துடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் எப்போது அமீரகம் திரும்புவார்கள்? எப்போது பயணத்தடை விலகும் என்பது போன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில்கூற வேண்டும்.

Airport
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap