அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தடை ஆகஸ்டு 7 ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அமீரகம் வரும் விமானங்களுக்கான தடை ஆகஸ்டு 7 ஆம் தேதிவரையில் நீடிக்கும் என இந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது பலரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,”அமீரக அரசின் உத்தரவுப்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை ஆகஸ்டு 7 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஆணைகளுக்கு இணங்க இந்த தடை மேலும் நீட்டிக்கப்படலாம் ” என தெரிவித்துள்ளது.
துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் நிறுவனமும் இந்தியா – அமீரகம் இடையிலான விமானத் தடையை ஆகஸ்டு 7 ஆம் தேதிவரையில் நீட்டிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
