UAE Tamil Web

வெறும் 25 திர்ஹம்ஸ் மூலதனம் : இன்று பல்லாயிரம் கோடிகளில் புரளும் நிறுவனம் – அமீரகத்தைக் கலக்கும் இந்தியக் குடும்பத்தின் வெற்றிக் கதை..!

Ajmal-Family-_177ec178eb8_large

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் ஒரு சிறிய கிராமம் அப்போதுதான் விடிந்திருந்தது. சொல்லப்போனால் மொத்த இந்தியாவும். ஆம் சுதந்திரம் வாங்கி சில ஆண்டுகளே ஆகியிருந்தன. வளைகுடா நாடுகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மசாலா பொருட்களுக்காக இந்தியாவிற்கு வந்துசென்றுகொண்டிருந்த காலம்.

முதல் பாராவில் சொன்ன கிராமத்தைச் சேர்ந்தவரான ஹாஜி அஜ்மல் அலி இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு (அப்போது பம்பாய்) குடியேறுகிறார். கையில் சில பாட்டில்கள். பாக்கெட்டில் 500 ரூபாய் பணம் (இன்றைய கணக்கிற்கு 25 திர்ஹம்ஸ்). வளைகுடா நாடுகளில் நல்ல நறுமணப் பொருட்களுக்கு கிராக்கி இருப்பதை அறிந்த பின்னர் தான் பம்பைக்கு மூட்டைமுடிச்சைக் கட்டியிருக்கிறார் அலி.

Haji-Ajmal-Ali_அந்த மூட்டைகளில் இருந்தவை எல்லாம் எண்ணெய்கள். இல்லை வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கான மூலிகை எண்ணெய் என்றுதான் சொல்ல வேண்டும். அலியின் வீட்டிற்குப் பின்னால் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் ஔத் மற்றும் சந்தன மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ எண்ணெய்கள் என்றும் சொல்லலாம். எப்படிச்சொன்னால் என்ன? ஆனால் அவைதான் அலியின் வாழ்க்கையை மட்டுமல்லாது அவரது சந்ததியையே கோடிகளில் புரள வைக்கப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.

பம்பாயில் சிறிய அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து, தான் கொண்டுவந்த பாட்டில்களில் உள்ள எண்ணெய்களை ஊற்றி, வாசனைத் திரவியம் ஒன்றைத் தயாரிக்கிறார். அதற்கென வாங்கிவைத்திருந்த பாட்டில்களில் அதை நிரப்பி விற்பனை செய்யக் கிளம்பியிருக்கிறார். கணிசமான லாபம். மீண்டும் எண்ணெய் – பாட்டில் – வியாபாரம் – லாபம் இந்தச் சக்கரம் வெற்றிகரமாகச் சுழன்றிருக்கிறது.

பாம்பேயில் இருந்த காலகட்டத்தில் வளைகுடாவில் இருந்துவரும் வியாபாரிகளிடம் பரீட்சயம் ஆகியிருக்கிறார் அலி. முதல் படியில் காலை அழுத்தமாக ஊன்றிவிட்டாயிற்று. இனி அடுத்த அடி எடுத்துவைக்கலாம் என அவர் நினைக்கவில்லை. அவர் நினைத்தது பறக்க. ஆம். வருடம் 1961. ஷார்ஜாவில் வந்திறங்குகிறார் அலி. புதிய மண். புதிய மக்கள். இருந்தால் என்ன? கைவசம் திறமை இருக்கிறது. ஆகட்டும் பார்த்துவிடலாம் என இறங்கி அடித்திருக்கிறார்.

சில சறுக்கல்கள் வழிமறித்த போதும் அதனை தன்னம்பிக்கையோடு கடந்திருக்கிறார். இறுதியாக துபாயில் தனது முதல் கடையை 1976 ஆம் ஆண்டு துவங்குகிறார் அலி. பஞ்சமில்லாத உழைப்பு இருந்தால் மட்டும் போதும். உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடலாம். பார்க்கவைத்தார் அலி. இன்றைய தேதியில் அஜ்மல் பெர்ஃபியூம்ஸ் நிறுவனத்திற்கு 280 கடைகள் உள்ளன. உலகம் முழுவதும் 45 நாடுகளில் அவர்களுக்கு கிளை இருக்கிறது.

துபாயில் கடை துவங்கி சில ஆண்டுகளில், சரியாகச் சொல்வதென்றால் 1979 ஆம் ஆண்டு துபாயில் தனியாக வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார் அலி. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அல் கூசில் உயர்தர ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கென தனி நிறுவனம் ஒன்றையும் அவர் ஆரம்பித்திருக்கிறார்.

சொந்த ஊரில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் மூலப்பொருட்களான ஔத், சந்தன மரங்கள் நடும் பணிகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றன. விளைச்சல் முடிந்ததும் அவை உலகம் முழுவதும் மணம் வீசத்துவங்கின.

அலி இறந்ததற்குப் பிறகு அவரது வாரிசுகள் இந்தப் பணிகளை ஏற்று நடத்தினர். இப்போது அவருடைய மகன் மற்றும் பேரன்கள் இத்தொழிலை கவனித்து வருகின்றனர்.

-Ajmal-Perfumes-CE005-1614062837089_177cda45d64_original-ratio
Image Credit: Clint Egbert/Gulf News

அஜ்மல் பெர்ஃபியூம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான அஜ்மல் அப்துல்லா தான் அலியின் மூன்றாவது தலைமுறையில் மூத்தவராகும். தனது குடும்பத்தைப் பற்றிப் பேசும் அப்துல்லா,” எங்களது குடும்பம் எப்போதும் முன்னோக்கிச் சிந்தித்தது. அவர்கள் எங்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றைத்தான். உங்களுடைய சந்ததிக்கு மிகச்சிறந்த வாழ்க்கையை உருவாக்கிக்கொடுங்கள் என்பதே அது. இதற்கு எடுத்துக்காட்டு சொன்னால் உங்களுக்குப் புரியும். மாட்டு வண்டியில் சென்ற எங்களது முன்னோர் எங்களை BMW காரில் செல்ல வைத்தனர். நாங்கள் எங்களது குழந்தைகளை போயிங் விமானத்தில் அனுப்பவேண்டும். இதுதான் வாழ்க்கையைப் பற்றிய அவர்களது திட்டம்” என்றார்.

“இந்தத் தொழிலில் எங்களுடன் எப்போதும் எங்களது வீட்டுப் பெண்கள் பக்கபலமாக இருக்கிறார்கள். என்னுடைய பாட்டி நான் இந்தியாவில் இருந்தபோது, என்னைப்போன்ற பல சிறுவர்களை அமீரகத்திற்குச் செல்லுங்கள். வாழ்க்கையை வளமாக்க வேண்டுமானால் உழைக்கவேண்டும் எனச் சொல்லிக்கொண்ட இருப்பார். தாத்தாவின் பல கனவுகள் நிறைவேற பக்கபலமாக இருந்தவர் அவர். அதேபோல, எனது தாயாரும். எங்களது படிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றில் அவர் மிகுந்த அக்கறையோடு இருந்தார்” என்கிறார் அப்துல்லா.

அலியின் மகனான முகமது அம்ருதீன் அஜ்மல் தான் தற்போது அந்த நிறுவனத்தின் தலைவர். தனது தந்தை பற்றி உருக்கமாகப் பேசிய அவர்,” அப்பா அமீரகம் வந்தபோது இங்கிருந்த வணிகர்கள் மற்றும் சில ஆட்சியாளர்களை சந்தித்து நட்புகொண்டிருந்திருக்கிறார். அப்போதைய காலகட்டம் அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை. தொழிலை விரிவுபடுத்த அப்பா நினைத்தபோது வளைகுடா யுத்தம் வந்தது. குவைத் அடிமையாக்கப்பட்டதை பயன்படுத்தி பல வணிகர்கள் எங்களுக்குப் பணம் கொடுக்க காலம் தாழ்த்தினர். இருப்பினும் அப்பா தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்டார். அந்த நம்பிக்கையின் விளைச்சலைத்தான் நாங்கள் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

கொரோனா காலத்தில் வியாபாரம் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும் நிலைமை மீண்டும் சரியாகும். புதிய எதிர்காலத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமீரகத்தைக் கலக்கிவரும் இந்த நிறுவனத்தின் கதை பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்ககூடியதாக அமைந்திருக்கிறது. தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் எந்த நாட்டிலும் நம் கொடி உயரப் பறக்கும் என்பதற்கு அஜ்மல் பெர்ஃபியூம்ஸ் நிறுவனம் ஒரு சாட்சி.

Ajmal-Family-_177ec178eb8_large
5 Shares
Share via
Copy link