“நான் விளையாட வேண்டும்.. என்னுடைய அணியில் நான் இருக்க வேண்டும்” இதைச் சொன்னது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான முகமது ரிஸ்வான். ஆனால் அப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தார் என்பதுதான் இங்கே நாம் கவனிக்கத்தக்கது.
துபாயில் அமைந்துள்ள மேடோர் மருத்துவமனைக்கு ரிஸ்வான் அழைத்துவரப்படுகையில் அவர் கடுமையான நெஞ்சுவலியால் துடித்திருக்கிறார். அவரை உடனடியாக ICU வில் சேர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் ரிஸ்வானுக்கு குரல்வளைத் தொற்று ஏற்பட்டதன் காரணமாக உணவுக்குழாய் பிடிப்பு மற்றும் மூச்சுக்குழல் அலர்ஜி ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் கடுமையான நெஞ்சுவலி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
மேடோர் மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு நிபுணர் டாக்டர். ஷாகிர் ஜைனுலாப்தீன் ரிஸ்வானுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷாகிர் இதுபற்றிப் பேசுகையில்,” அனுமதிக்கப்படும் போது அவர் கடுமையான வலியால் அவதிப்பட்டார். நாங்கள் உடனடி சிகிச்சையை அவருக்கு அளிக்க ஆரம்பித்தோம். பொதுவாக இத்தகைய வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து விடுபட வாரக்கணக்கில் பிடிக்கும் ஆனால் ரிஸ்வான் இரண்டு நாட்களுக்குள்ளாகவே மீண்டு வந்தார். தான் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவேண்டும் என அவர் சொல்லும்போது நான் திகைத்துவிட்டேன். அவருடைய விடாமுயற்சியின் பலனாக 35 மணிநேர சிகிச்சைக்குப் பிறகு ரிஸ்வான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்”
“அடுத்தநாள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் அவர் சிக்சர் அடிக்கையில் நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன் சொல்லப்போனால் நான் குதித்துக்கொண்டிருந்தேன். ஒரு மருத்துவராக எனது கடமையை நான் சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன்” என்றார்.
ICU விலிருந்து மீண்ட ரிஸ்வான் அடுத்தநாள் போட்டியிலேயே 67 ரன்கள் விளாசி தன்னுடைய தன்னம்பிக்கையின் ஆழம் என்ன என்பதை உலகத்திற்கு அறிவித்தார். மேட்ச் முடிந்ததும் தனக்கு சிகிச்சையளித்த ஷஹீருக்கு தன்னுடைய டி-ஷர்ட்டை கையெழுத்திட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக அளித்துள்ளார் ரிஸ்வான்.
தற்போது அப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.