34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

தமிழகத்திற்கு கூடுதல் தனி விமானங்களை இயக்குங்கள் – அமீரக வாழ் தமிழ் மக்களின் கோரிக்கை!

emiratesjan

அமீரகத்தில் தவிக்கும் தமிழக மக்களை மீண்டும் தாயகம் அனுப்பும் பொருட்டு கூடுதல் தனி விமானங்களுக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என அமீரக வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமீரக வாழ் தமிழர்களில் பலர், கொரோனா காரணமாக அமீரகத்தில் தவிக்கும் பல இந்தியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவருகின்றனர். அமீரகத்திலிருந்து தமிழகம் திரும்பும் மக்களில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களை ஏற்க இயலாதவர்களுக்கு தமிழக அரசு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

“அமீரகத்தில் கஷ்டப்படும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அவர்களுடைய வலி மிகுந்த குரலை அரசு கேட்கவேண்டும்” என அமீரகத்தில் உள்ள குட்வின்ஸ் குழுமத்தின் வழக்கறிஞரும், அமீரக வாழ் தமிழ் மக்களுக்கு அன்றாடம் சேவை புரிந்து வருபவருமான திரு.தேவநாத் மகாதேவா தெரிவித்தார்.

“அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்ப விமானம் கிடைக்காததால் ஏறத்தாழ 45,000 தமிழர்கள் அமீரகத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் வேலைகளை இழந்த நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் மற்றும் தங்களது கணவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தவிக்கும் கர்ப்பிணிகளும் அடங்குவர். கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களை செலுத்த முடியாதவர்களுக்கு அதிலிருந்து தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என மகாதேவா குறிப்பிட்டார்.

துபாயில் உள்ள ரேடியோ சேனலின் வாயிலாக கடந்த மூன்று வாரமாக தினந்தோறும் அமீரகத்திலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் மக்களுக்கான அறிவுரைகளை வழங்கிவருகிறார் திரு. மகாதேவா.

money-wills-Devanand-Mahadeva
Image Credit : The National

“ரேடியோவில் எனது அறிவுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருந்ததன் காரணமாக உதவி அழைப்பு எண் ஒன்றினை அறிமுகப்படுத்தினேன். இதன் மூலமாக வெள்ளிக்கிழமை தவிர்த்து, தினந்தோறும் மதியம் 2 மணிமுதல் 4 மணிவரையில் அமீரகத்தில் தவிக்கும் தமிழர்களுக்கான உதவிகளை தொலைபேசி வாயிலாக அளித்துவருகிறேன். இம்முயற்சியின் வாயிலாக அமீரகத்தில் தவிக்கும் தமிழர்கள் பலரின் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும்” என மகாதேவா குறிப்பிட்டார்.

அமீரக மக்களுக்கு இரவுபகல் பாராமல் உதவிவரும் துபாய் தமிழ் சங்கத்தின் தலைவரும், தொழில்முனைவோருமான டாக்டர். ஜெயந்திமாலா சுரேஷ், தன்னிடம் உள்ள தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களின் காத்திருப்புப் பட்டியலில் 10,000 பேர் இருப்பதாகத் தெரிவித்தார்.

“துபாய் தமிழ் சங்கம் 12 தனி விமானங்களை ஏற்பாடு செய்திருக்கிறது. கூடுதலாக, 20 தனி விமானங்களை இயக்குவது குறித்தான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும், 10 தனி விமானங்களுக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறேன். கடந்த ஜூன் 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ராஸ் அல் கைமாவில் இருந்து மதுரைக்கு இரண்டு தனி விமானங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டன” என டாக்டர்.ஜெயந்திமாலா தெரிவித்தார்.

jeyanthimala suresh
Image Credit : Youtube

“எங்களுடைய மிகப்பெரிய சிக்கல் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களின் அளவு தான்” என டாக்டர் ஜெயந்திமாலா தெரிவித்தார்.

தமிழகத்தின் திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு ஐந்து தனி விமானங்களை இயக்க அனுமதிகோரி விண்ணப்பித்துள்ள சிட்டி ஒன் டூரிசம் & டிராவல் (City One Tourism & Travel) நிறுவனத்தின் பொது மேலாளரான திரு. புனித் ஷா,” கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்களால் பயணிகளுக்கு எழும் கேள்விகளை சமாளிப்பது சிரமமாக இருக்கிறது” என்றார்.

“பயணத்திற்கு முன்பாகவே பிரயாணிகளுக்கு இரண்டு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு இரண்டிலும் நெகட்டிவ் வர வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தனிமைப்படுத்தலுக்கு ஒரு நபருக்கு 600 – 1000 திர்ஹம்ஸ் வரையில் செலவாகிறது. ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 400 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் தங்களது தனி விமானத்தின் டிக்கெட் கட்டணம் தவிர்த்து கூடுதலாக 1000 – 1500 திர்ஹம்ஸ் வரையில் செலவழிக்க வேண்டிவருகிறது. பலரால் இந்த அளவு கட்டணங்களை ஏற்க இயலுமா? அமீரகத்தில் பணியிழந்த பல நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களுக்கான கட்டணங்களை நான் தனிப்பட்ட முறையில் செலுத்தியிருக்கிறேன்” என புனித் தெரிவித்தார்.

Punit - 2_
Image Credit : city one tours

“தனி விமான இயக்கங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுவதற்கு முன்னர் மாநில அரசுகள் சிறிது அவகாசம் அளிக்கவேண்டும். கடந்த ஜூன் 25 ஆம் தேதி மதுரைக்கு சிறப்பு விமானம் ஒன்றை இயக்கினேன். அவ்விமானத்தின் மூலமாக பச்சிளங் குழந்தைகள் உட்பட மொத்தம் 194 பேர் மதுரை சென்றடைந்தனர். ஆனால் பயண தேதிக்கு முந்தைய இரவு 11 மணிக்கு விமான இயக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்திருப்பதாவும், அதனால் விமானத்தை இயக்க முடியாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்குமிடங்களை காலி செய்துவிட்டு வந்திருந்த பல நீல நிறக் கழுத்துப்பட்டை தொழிலாளர்களுக்கு தங்க ஏற்பாடு செய்துகொடுத்தேன். குறைவான கட்டணத்தில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகளை பிரயாணிகளுக்கு அளிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என புனித் தெரிவித்தார்.

அமீரக வாழ் தமிழர்கள் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 2 முதல் 4 மணி வரையில் 055-745 4474 என்ற தேவநாத் மகாதேவா அவர்களின் உதவி எண்ணிற்கு அழைத்து தங்களுக்கான ஆலோசனைகளைப் பெறலாம்.

 

இதையும் படிங்க.!