கடந்த டிசம்பர் மாதம் தான் அமீரக வாழ் தமிழரான ஷஹீது ரஹ்மான் இசையில் கண்களை மூடிக்கொண்டு கவிதை எழுதத் தொடங்கினேன் பாடல் வெளிவந்து அமீரக வாழ் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய காதல் பாடலை ஷஹீது ரஹ்மான் குழு வெளியிட்டிருக்கிறது.
முந்தைய பாடல் முழுவதும் மேற்கத்திய பாணி என எடுத்துக்கொண்டால் தற்போது வெளிவந்திருக்கும் இந்த விருதுநகருக்காரி பாடல் முழுவதும் தமிழ்வாசம் வீசும் காதல் பாடல் என்றே சொல்லவேண்டும்.
பரபரப்பான அலுவலகம், விஞ்சிடும் காதலி, கெஞ்சிடும் காதலன் இதுதான் களம். இதில் அதகளம் செய்திருக்கிறது ஷஹீது ரஹ்மான் பட்டாளம். முழுவதுமான கார்ப்பரேட் சூழலில் காதல் வயப்பட்ட தமிழ் இளைஞனின் கனவும் ஆசையும் தான் இப்பாடல்.
இதன்காரணமாகவே தனது அந்தரங்க காதலை, தனது மொழியில் குறிப்பாக வட்டார வழக்கில் தனக்கேற்ற முறையில் வெளிப்படுத்தும் இளைஞனாக உருவகப்படுத்தப்படுகிறார் நாயகன் டியாகோ மேத்திவ். அவருக்கு இணையாகத் தோன்றும் பூர்ணிமா சங்கர் பெயருக்கேற்றாற்போல் பாடலுக்கு பூரணத்துவம் கொடுத்திருக்கிறார்.
பாடலுக்கான இடங்களைத் தேர்வு செய்தவர்களுக்கு நிச்சயமாக வாழ்த்துகள் சொல்லியாகவேண்டும். முழுவதும் அமீரகத்திலேயே எடுக்கப்பட்ட பாடல் என்றாலும் பாடலைப் பார்ப்பவர்களுக்கு எந்த ஊர் இது? எனத் தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை. இடங்கள் தேர்வில் மற்றொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பாடலில் காதலியோ, காதலனோ தனியாக திரையில் தோன்றுகையில் பெரும்பாலும் பின்னணி வெற்று மணலாகவோ அல்லது வெற்று அறையாகவோ இருக்கிறது.
இதுவே இணையர்களாகத் தோன்றுகையில் பசுமையும், வழிந்தோடும் நீர்த்தடங்களுமாக கண்களை குளிர்விக்கின்றன. இப்படி இருவருக்குமிடையேயான காதலை ஈரத்தின் மூலமாகவும் பசுமையின் மூலமாவும் காட்சிப்படுத்திய விதம் அபாரம்.
பாடல் வரிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, பாடலில் காதலனின் மனவோட்டத்தைப் பற்றி அறிந்துகொள்தல் அவசியம். இது முழுக்க அவனுடைய உளக் கிளர்ச்சியே ஆகும். காதல் எனும் காட்டாற்று வெள்ளத்திற்கு உங்களால் வரையறை வகுக்க முடியாது. இதன்காரணமாகவே, மஹாதீர் முஹம்மது மற்றும் முஹம்மது நபில் ஆகிய இருவரும் வரிகளை வட்டார வழக்கிலும், தற்காலத் தன்மையோடும் பாடல் வரிகளை அமைத்திருக்கிறார்கள். பாடலில் ஆங்காங்கே வெளிப்படும் ஆங்கில வார்த்தை பிரயோகங்களுக்கான காரணமும் இதுதான்.
இதே கூற்றின் அடிப்படையிலேயே நடனத் தேர்வையும் நோக்க வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் பாடலின் ஒவ்வொரு அசைவிற்குப் பிறகும் ஷஹீது ரஹ்மான் மற்றும் சலேஷ் பிள்ளையின் பிரம்மாண்ட உழைப்பு கண்கூடாகத் தெரிகிறது. விருதுநகருக்காரி நிச்சயம் தமிழக இளைஞர்களின் ரசனைக்கு விருந்து படைப்பாள்.
அமீரகத்திலேயே முதன்முறையாக..
இந்த பாடல் கடந்த பிப்ரவரி 1, 2021 ஆம் தேதி யூடியூபில் வெளியிடப்பட்டது. இன்றைய நிலவரப்படி இதுவரையில் 1,22,396 பேர் இதனைக் கண்டுகளித்துள்ளனர். அமீரக வரலாற்றிலேயே அமீரகத்தில் வெளியிடப்பட்டு இத்தனை குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்த தமிழ் பாடல் இதுதான் என்பது இதன் தனிச்சிறப்பு.