UAE Tamil Web

துபாய்க்கு மார்ச் 26 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

துபாய் EXPO 2020 கண்காட்சிக்கு தமிழக சார்பில் அரசு துறைகள் பங்கேற்க தமிழக அரசு ஏற்கனவே ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், கண்காட்சியில் பங்கேற்க மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1-ம் தேதி தொடங்கிய துபாய் EXPO 2020′, நடப்பு 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அரங்கில், தமிழக அரசு சார்பில், அரங்குகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். துபாய் EXPO கலந்துகொள்வதன் மூலமாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த EXPO கண்காட்சியில் இந்தியாவின் அரங்கின் நுழைவு வாயிலில் பிரமாண்ட காந்தி சிலை வடிவமைக்கப்பட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது வேறுபட்ட கலை, கலாசாரம், பன்னோக்குச் செயல்பாடுகள் குறித்து அந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 Shares
Share via
Copy link