துபாய் EXPO 2020-இல் பங்கேற்க வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
192 நாடுகள் பங்கேற்றுள்ள துபாய் EXPO 2020 கண்காட்சியில் பங்கேற்பதற்காக வருகிற 26 அன்று இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் வருகிறார்.
இவரது துபாய் பயணத்தை திருவிழா போல் கொண்டாட திட்டமிட்டுள்ள வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் அதற்கான முன்னேற்பாடுகளை அதன் தலைவர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் செயல்படுத்தி வருகிறது.
துபாய் வரும் முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்து ‘நம்மில் ஒருவர்’ என்ற பாராட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ள வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம், அது தொடர்பான தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ‘நம்மில் ஒருவர்’ நிகழ்ச்சியை நடத்துவது குறித்து துபாயில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
மேலும் அது குறித்து பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் திமுக ஆட்சி பொறுப்பெற்றவுடன் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி அவர்களுக்கென்று அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாடு வாழ் தமிழர் இந்தியன் சங்கத்தின் அமீரக தலைவராக உள்ள எஸ்.எஸ். மீரான் தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை சிறப்புடன் நிர்வகித்து வருவதாகவும் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்
இந்நிலையில் துபாயில் முதல்வர் பங்கேற்க இருக்கும் நம்மில் ஒருவர் விழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு அதற்கான அனுமதி படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.