UAE Tamil Web

அமீரக வாழ் தமிழரின் இசையில் வெளிவந்த அமீரகத்தில் எடுக்கப்பட்ட தமிழ் பாடல்..!

Ennai Marandhen New Tamil Song

அமீரகவாழ் தமிழர் ஒருவரின் இசையில் அமீரகத்திலேயே எடுக்கப்பட்ட புதிய தமிழ் பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. இதுதான் தற்போது ஹாட் டாபிக். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷஹீது ரஹ்மான் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு இசை மீதும் தமிழ்ப் பாடல்கள் மீதும் கொண்ட அலாதி ஆர்வத்தின் விளைவாக, தானே இசை கற்றுக்கொண்டு புதிய பாடல்களை தயாரித்து இயக்கி வருகிறார்.

ஏற்கனவே “கண்களை மூடிக்கொண்டு” , “மற்றும் விருதுநகருக்காரி” போன்ற தமிழ்ப் பாடல்களின் மூலமாக பல அமீரக வாழ் மக்களிடையே புகழ்பெற்ற ரஹ்மானின் இசையில் இன்று வெளியான “என்னை மறந்தேன்” பாடலை அவரது நண்பரும் சக கலைஞருமான சலேஷ் பிள்ளை இயக்கியிருக்கிறார்.

ரஹ்மானின் இயக்கத்தில் வெளிவந்த முந்தைய பாடல்களில் அசோசியேட் இயக்குனராகப் பணிபுரிந்த சலேஷ் தான் கற்றுக்கொண்ட வித்தையை இப்பாடலில் இறக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பாடல் வெளியீடு குறித்து ரஹ்மான் சமீபத்தில் அறிவித்தார். அப்போது நம்முடைய UAE Tamil Web ஆசிரியர் குழு அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தது. அப்போது தன்னுடைய கலைப்பயணம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

பெண் – இயற்கை – காதல் ..

பரபரக்கும் வாழ்க்கைக்கு மத்தியில் பரந்து கிடக்கும் இயற்கையைக் கொண்டாடும் ஒரு பெண்ணின் மனவோட்டம் தான் பாடல். இந்த மையச்சரட்டில் இசை, கண்ணைக் கவரும் காட்சிகள், கவர்ந்திழுக்கும் கதாநாயகி, பரவசமூட்டும் வரிகள் என முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கியிருக்கிறார் சலேஷ்.

தமிழ்ப் பெண்களுக்கும் இயற்கைக்கும் உள்ள பிணைப்பை இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கொண்டாடிய கவிஞர்களின் பேனாவில் இருந்து தப்பிய சொற்களில் இருந்து பாடல் அமைத்திருக்கிறார் கவிஞர் சதீஷ் சுப்பிரமணியன். ஓயாமல் கேட்டிடும் வாகன சப்தம், மூச்சு முட்டும் புகை, இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் இயற்கையையும் நாம் கொண்டாடிட வேண்டும் என்பதை “புல்வெளி மிதிக்கும் பறவையைப் பாரேன்.. அதன்மீது பார்வை பரவட்டுமே” என எளிதாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

இது ஒருபக்கம் என்றால் பாடலின் பின்புலக் காட்சிகள் பரவசமூட்டுகின்றன. முதல் ஃபிரேமிலேயே உச்சிக் கதிரவனின் ஒளி வெள்ளத்தில் நாயகி அறிமுகமாகிறார். பச்சை மரங்களைத் தழுவும் அவரது பின்னால் ஓர் ஆறு அமைதியாய் நெளிகிறது. பாடலின் கருவை முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு கடத்திவிட்ட ஒளிப்பதிவு இயக்குனர் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

இயற்கை வழிந்தோடும் இடங்களில் தோன்றினாலும் நம் கண்களை ஆக்கிரமித்துக்கொள்ளும் நாயகி சரண்யா சஜி அவர்களுக்கு விரைவில் ஆர்மி அமைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் எனப்படும் திரைத் தோன்றலுக்கான முகம். இயற்கையின் உன்மத்தத்தைக் கொண்டாடும் ஓர் தமிழ்ப்பெண் எப்படி இருப்பார் என்பதற்கு சாட்சி சொல்லியிருக்கிறார் சரண்யா.

பாடலை தயாரித்து, ஒளிப்பதிவு செய்திருக்கும் ரஹ்மான் இசையிலும் கலக்கியிருக்கிறார். இசைத் தெரிப்புகளின் மூலம் காட்சியோடு நம்மை ஒட்டவைக்கிறது ரஹ்மானின் இசை.

இப்படி, மயக்கும் திரைக்காட்சி, பதுமை போல் வலம்வரும் நாயகி, சொக்க வைக்கும் இசை இத்தனைக்கும் மத்தியில் மனத்தைக் கரைக்கும் தன்னுடைய மத்திரக் குரலால் கவனம் ஈர்க்கிறார் திஷா பிரகாஷ். இப்பாடலின் மூலமாக தன்னுடைய “ஒலி”மயமான எதிர்காலத்திற்கு வெண்பஞ்சுக் குரலால் கட்டியம் கூறியிருக்கிறார் திஷா என்றே சொல்லவேண்டும்.

தேர்ந்த கலைஞர்களைக்கொண்டு செதுக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில் கித்தார், ஒலிக் கோர்வை, சவுண்ட் எஞ்சினீரிங் போன்ற நுட்பத் துறைகளிலும் சிக்சர் அடித்திருக்கும் கலைஞர்களை ஒதுக்கிவிட முடியாது.

பாடல் முழுவதும் மனதிற்கு நெருக்கமாக இணைந்து பயணிக்கும் கித்தாரை சனல் ஜார்ஜின் விரல்கள் மீட்டியிருக்கின்றன. ஒலிப்பதிவை நிபு பாபு மேற்கொண்டிருக்கிறார். சதீஷ் ராய் சவுண்ட் எஞ்சினியராகப் பணியாற்றியிருக்கிறார்.

பாடலைக் கேட்க கீழே கிளிக் செய்யவும்.