UAE Tamil Web

விரைவில் வெளியாகவுள்ள அமீரகத்தில் எடுக்கப்பட்ட தமிழ் பாடல் – இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்கள்..!

Wide_compressed for web_jpeg med

துபாயில் வசித்துவரும் தமிழரான ஷஹீது ரஹ்மான் தனது அடுத்த தமிழ்ப்பாடலை ஜூன் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனையறிந்த நமது ஆசிரியர் குழு ரஹ்மான் அவர்களை சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்ததுடன் அவரது புதிய பாடல் குறித்தும் கேள்வி எழுப்பியது. வேலை – இசை – கனவு – லட்சியம் என பல்வேறு விஷயங்களை அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஏற்கனவே “கண்களை மூடிக்கொண்டு” , “மற்றும் விருதுநகருக்காரி” போன்ற தமிழ்ப் பாடல்களின் மூலமாக பல அமீரக வாழ் மக்களிடையே புகழ்பெற்ற ரஹ்மானிடம் இசை ஆர்வம் குறித்து கேட்டபோது அவர்,” சிறுவயதில் எனது சகோதர் மூலமாக இசைக்கருவிகளின் பரீட்சயம் கிடைத்தது. தமிழகத்தில் வேரோடிய நெடுங்கால இசை மற்றும் பாடல் ஆக்கங்கள்தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்திருக்கிறது” என்றார்.

இவருடைய “கண்களை மூடிக்கொண்டு” பாடலை அமீரக வாழ் தமிழ் மக்களுக்கான ரேடியோவான 89.4 தமிழ் FM வெளியிட்டிருக்கிறது. புகழ்வெளிச்சம் விழுந்து பரவிய சில மாதங்களில் தனது அடுத்த பாடலான “விருதுநகருக்காரி” -யை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார் ரஹ்மான். இந்த பாடல் கடந்த பிப்ரவரி 1, 2021 ஆம் தேதி யூடியூபில் வெளியிடப்பட்டது. பாடல் வெளிவந்து 10 நாட்களுக்குள் 1,22,396 பேர் இதனைக் கண்டுகளித்தனர். அமீரக வரலாற்றிலேயே அமீரகத்தில் வெளியிடப்பட்டு இத்தனை குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்த தமிழ் பாடல் இதுதான் என்பது இதன் தனிச்சிறப்பு.

அமீரகத்தில் எடுக்கப்பட்ட தனது சமீபத்திய பாடல்களைக் குறித்து ரஹ்மான் பேசுகையில்,” அமீரகம் எப்போதும் ஒருங்கிணைப்பின் பூமி. கலாச்சாரம், மொழி, இனம் என வெவ்வேறு மக்களை இந்நாடு ஒன்றிணைக்கிறது. அப்படி மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒரே விஷயம் காதல் மட்டுமே. மனித வரலாற்றை தின்று செரித்த நிஜம் காதல் மட்டுமே. அதன்காரணமாகவே எனது சமீபத்திய காதல் பாடல்களை அமீரகத்தில் எடுத்தோம்” என்றார்.

துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணிபுரியும் ரஹ்மானிடம் “சமீபத்தில் வெளியான இரண்டு பாடல்களுமே காதல் பாடல்கள்தாம். மூன்றாவதிலும் இதுவே தொடருமா” எனக் கேட்டபோது அதற்குப் பதிலளித்த ரஹ்மான்,”இது காதல் பாடல் தான். ஆனால் பெண்ணிற்கும் இயற்கைக்கும் இடையேயான காதலைப் பற்றிப் பேசும் பாடல். இதனை எனது நண்பரும் சக கலைஞருமான சலேஷ் பிள்ளை இயக்கியிருக்கிறார்” என்றார்.

உங்களது குழுவின் புதிய இயக்குனர் சலேஷ் பிள்ளை பற்றிச் சொல்லுங்கள் என கேட்டபோது நாற்காலியின் நுனியில் உட்கார்ந்துகொண்டு பேசத் துவங்கினார். “முன்னர் வெளிவந்த பாடல்களில் அவர் அசோசியேட் இயக்குனராக இருந்தவர். எனது நண்பர் என்பதைக் காட்டிலும் சக கலைஞர் என்றே சலேஷ் பற்றிச் சொல்வேன். செய்யும் வேலையில் நேர்த்தியும் கலையின் நுண்ணிய பரிமாணங்களை வெளிக்கொனர்வதிலும் ஜித்தன். எங்களுடைய வேலைகளை எங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறோம். இதற்கு அவர் நிச்சயம் தகுதி வாய்ந்தவர். விரைவில் நீங்களும் அதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

கூடுதல் தகவல்களைப் பற்றி கேட்க, ” ஜூன் 1 ஆம் தேதி பாடலே வெளிவந்துடும். உங்களுடைய சந்தேகங்களுக்கு, ரசனைகளுக்கு நிச்சயம் பாடல் பதிலளிக்கும் பாஸ்” எனக் கண்ணடித்துச் சிரித்தார் ரஹ்மான்.

“என்னை மறந்தேன்” எனத் துவங்கும் ரஹ்மானின் அடுத்த பாடல் வரும் ஜூன் 1 ஆம் தேதி யூடியூபில் வெளியிடப்பட இருக்கிறது. கூடுதல் ஆச்சர்யம் ஒன்றையும் உதிர்த்திருக்கிறார் ரஹ்மான். இப்பாடல் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மொழிகளிலுமே ஜூன் 1 ஆம் தேதி பாடலானது வெளியிடப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

சந்திப்பின் இறுதியாக தனது குழுவைப் பற்றிப்பேசியவர்,” நல்ல திறமையான கலைஞர்கள் நம் பக்கத்தில் இருந்தால், நம்முடைய பணிகளில் பாதி குறைந்துவிடும். இதுதான் எனது பாணி. உத்வேகமும், புதிய முயற்சிகளை எடுக்கத் தயங்காததுமே எங்களுடைய குழுவின் ஆகச்சிறந்த பலம் என்பேன். எப்போதெல்லாம் நான் எனக் குறிப்பிடுகிறேனோ அது எனது குழுவையே குறிக்கிறது” என்றார்.

ஜூன் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் என்னை மறந்தேன் பாடலுக்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துத் தெரிவித்த ஆசிரியர் குழு அவரிமிருந்து விடைபெற்றது. தமிழ் மக்களுக்கு விரைவில் புதிய விருந்து ஒன்றைப் படைப்பார் ரஹ்மான் என நம்பலாம்.