UAE Tamil Web

கட்டிடத் தொழிலாளர்கள், டிரைவர்களுக்கு இலவச எக்ஸ்போ டிக்கெட் – எப்படிப் பெறுவது..?

workers

உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அமீரக அரசும் அரசு துறைப் பணியாளர்கள் எக்ஸ்போவிற்கு செல்ல சம்பளத்துடன் விடுமுறையை அறிவித்துள்ளது.

அதேபோல, குழந்தைகளை பராமரிப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு இலவச எக்ஸ்போ டிக்கெட்டை வழங்க எக்ஸ்போ நிர்வாகம் உத்தரவிட்டது. அதேபோல, கட்டிடத் தொழிலாளர்கள், டிரைவர்கள், விருந்தோம்பல் துறைப் பணியாளர்கள் (hospitality sector) ஆகியோருக்கும் இலவச டிக்கெட் வழங்க தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு கீழே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குழந்தை பராமரிப்பாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் எப்படி இலவச எக்ஸ்போ டிக்கெட்டைப் பெறுவது?

குழந்தை பராமரிப்பாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் தங்களது பணி என்ன என்பதை நிரூபிக்கும் வகையில் ரெசிடென்சி விசா போன்ற ஆவணத்தை எடுத்துச்சென்று நேரடியாக டிக்கெட்டை இலவசமாக வாங்கலாம்.

எக்ஸ்போவின் நான்கு நுழைவு கேட்களிலும் உள்ள டிக்கெட் பூத்களில் இவர்களால் டிக்கெட்டை வாங்க முடியும்.

முன்கூட்டியே, ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை வாங்கும் வசதி இவர்களுக்குக் கிடையாது.

குழந்தை பராமரிப்பாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் தங்களது ஸ்பான்சருடன் எக்ஸ்போவிற்கு செல்லவேண்டுமா?

தேவையில்லை. குழந்தை பராமரிப்பாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் தனியாகவோ அல்லது அவர்களது ஸ்பான்சருடனோ எக்ஸ்போவிற்குச் செல்லலாம். அதேபோல எக்ஸ்போ நடைபெறும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இவர்கள் இலவசமாக எக்ஸ்போ சிட்டிக்குள் நுழையலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் டிக்கெட்டை வாங்கியிருக்கவேண்டும்.

RTA டிரைவர்கள் இலவச டிக்கெட்டைப் பெறலாமா?

பெறலாம். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் பணிபுரியும் பஸ் மற்றும் டாக்சி டிரைவர்கள் தங்களது செல்லுபடியாகும் ID அல்லது ரெசிடென்சி விசாவைக் காண்பித்து இலவச டிக்கெட்டைப் பெறலாம். ஆனால் இவர்கள் ஒருமுறை மட்டுமே இந்த இலவச டிக்கெட்டைப் பெற முடியும்.

ஹோட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கபேக்களில் பணிபுரியும் நபர்களும் இலவசமாக எக்ஸ்போ டிக்கெட்டைப் பெறலாம். இந்த சலுகை அக்டோபர் மாதம் வரை மட்டுமே. இலவச டிக்கெட் பெற விரும்பும் நபர்கள் முதன்மை டிக்கெட் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

எக்ஸ்போ உருவாக்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இலவச டிக்கெட் கிடைக்குமா?

கிடைக்கும். இதற்காகவே ஹயாகும் என்னும் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. ஆகவே அமீரகத்தில் வசித்துவரும் எக்ஸ்போ உருவாக்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் இலவச டிக்கெட்டைப் பெறலாம்.

அதேபோல, அமீரகம் முழுவதிலுமுள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு எக்ஸ்போ நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் 350,000 தொழிலாளர்கள் குழுவாக எக்ஸ்போ சிட்டியை பார்வையிட அனுமதியளிக்கப்பட இருக்கிறது.

ஒரு தொழிலாளருக்கு 1 திர்ஹம்ஸ் வீதம் டிக்கெட்கள் வழங்கப்பட இருப்பதாகவும் இதனை அவர்களது நிறுவனமே செலுத்தும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இதன்மூலம் தொழிலாளர்கள் எளிதில் உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இவை தவிர்த்து பள்ளி கல்லூரி மாணவர்கள், 18 வயதிற்கு உட்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் இலவச எக்ஸ்போ டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

எக்ஸ்போவின் வழக்கமான டிக்கெட் விலை என்ன?

  • ஒருமுறை மட்டும் செல்வதற்கு – 95 திர்ஹம்ஸ்
  • ஆறு மாதத்திற்கான பாஸ் வாங்க – 495 திர்ஹம்ஸ்
  • 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்த நேரத்திலும் இலவசமாக அரங்கினுள் நுழையலாம். இவர்களுடன் வருபவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.
  • பலமுறை உள்ளே செல்வதற்கான பாஸ் வாங்க – 195 திர்ஹம்ஸ் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
workers
5 Shares
Share via
Copy link
Powered by Social Snap