அமீரக வாழ் இந்தியர்களின் நலனுக்காக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு ஆக்கபூர்வ முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் நீட்சியாக அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அமீரக சட்ட திட்டங்களை மதித்து செயல்படவேண்டும் எனவும் தனிப்பட்ட நிதி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் எனவும் துணைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் அமீரகத்தில் வசித்துவரும் இந்தியர்கள், துணைத் தூதரகத்தின் நடவடிக்கைகள், முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வழிகளைப் பற்றி துணைத் தூதரகத்தின் பத்திரிக்கை, செய்தி மற்றும் கலாச்சார அதிகாரியான டாடு தாமு விளக்கியுள்ளார்.
அதன்படி, PBSK மொபைல் அப்ளிகேஷன், துணைத் தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமீபத்தில் துவங்கப்பட்ட மாதாந்திர இணைய இதழான இந்தியா மேட்டர்ஸ் (India Matters) ஆகியவற்றின் வாயிலாக துணைத் தூதரகத்துடன் மக்கள் இணைந்திருக்கலாம் என தாமு குறிப்பிட்டார்.
அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களிடையே அமீரக அரசின் விதிமுறைகள், சட்டங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வருபவர்கள் மற்றும் ஏற்கனவே அமீரகத்தில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக இந்த விழிப்புணர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அமீரக வாழ் இந்தியர்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் குறித்த பட்டியலை துணைத் தூதரகம் வெளியிட்டது. அதுபற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
