UAE Tamil Web

அமீரகத்தில் கடும் பனிப்புகை – வானிலை ஆய்வுமையம் மற்றும் காவல்துறை வெளியிட்ட அடுத்தடுத்த எச்சரிக்கைகள்..!

fog in UAE

அமீரகத்தில் இன்று கடுமையான பனிப்புகை ஏற்படும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) எச்சரித்திருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்து NCM வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அமீரகத்தில் கடும் பனிப்புகை ஏற்படும். இதனால் 1000 மீட்டருக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் இருக்கலாம். துபாய் – அல் அய்ன் சாலை, துபாயின் நவ்ஸா, லஹ்பாப் மற்றும் அல் லிசைலி ஆகிய பகுதிகளிலும் ஷார்ஜாவைப் பொறுத்தவரையில் மதாம், அல் தாஹித் ஆகிய பகுதிகளிலும் பனிமூட்டம் அதிகமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனவோட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கும் குறைவாகவே மட்டுமே வாகனங்களை இயக்கவேண்டும். வாகனக் கோளாறு அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே ஆபத்து எச்சரிக்கை விளக்குகளை (hazard warning lights) எரியவிடவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் உள்ள வேக அளவுகளை வாகனவோட்டிகள் பின்பற்றவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நாளின் பிற பகுதிகளில் வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும். நாட்டின் உட்பகுதியில் வெப்பநிலை 28°C முதல் 31°C வரையிலும் கடலோரப்பகுதிகளில் 26°C to 29°C ஆகவும் மலைப்பகுதிகளில் 23°C to 26°C ஆகவும் இருக்கும்.


ஈரப்பதத்தைப் பொறுத்தவரையில் கடலோரப்பகுதிகள் மற்றும் உட்பகுதிகளில் 80 முதல் 95 சதவிகிதமாகவும் மலைப்பகுதிகளில் 45 முதல் 75 சதவிகிதமாகவும் இருக்கும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் கடல் சீற்றமாக இருக்கும் என NCM தெரிவித்திருக்கிறது.