UAE Tamil Web

5 நிமிடங்களில் அனைத்து நாடுகள் மற்றும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்பிக்கும் 5 வயது அமீரக வாழ் இந்திய சிறுமி..!

Prnaavi

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களை 4 நிமிடம் மற்றும் 23 வினாடிகளில் கூறி அனைவரையும் திக்குமுக்காடச் செய்திருக்கிறார் அமீரக வாழ் இந்திய சிறுமியான பிரணவி.

- Advertisment -

துபாயில் உள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் பயிலும் பிரணவி இதுவரை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Asia Book of Records) ஆகிய சாதனைப் புத்தகங்களின் இடம்பெற்றிருக்கிறார்.

தனது அறை முழுவதும் உலக வரைபடங்களை ஒட்டியிருக்கும் பிரணவிக்கு நாடுகளின் பெயர்களை மனப்பாடம் செய்யும் எண்ணம் வந்தது, சென்ற வருடத்தின் ஒரு இரவில் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோதுதான்.

அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அமெரிக்காவின் மாநிலங்களின் பெயர்களை மனப்பாடமாக சொல்வதை பிரணவி அன்றிரவு பார்த்திருக்கிறாள். தனக்கும் அவ்வாறு நாடுகளின் பெயர்களை மனப்பாடம் செய்யவேண்டும் என தனது பெற்றோரிடம் பிரணவி தெரிவித்திருக்கிறார்.

மகளின் ஆசையை நிறைவேற்ற, தெளிவான திட்டங்களை வகுத்தார் பிரணவியின் அம்மாவான பிரியங்கா. ஆங்கில அகரவரிசைப்படி நாடுகளை வகைப்படுத்தி, அவற்றை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்ற வழிமுறைகளையும் பிரியங்கா கற்றுத்தர, பிரணவியும் ஆர்வத்துடன் கற்றிருக்கிறாள்.

“நாடுகளின் பெயர்களை ஒன்றரை மாதங்களில் பிரணவி மனப்பாடம் செய்துவிட்டாள். ஆனால் அவற்றை சொல்ல 11 நிமிடங்கள் அவளுக்குத் தேவைப்பட்டது. தொடர்பயிற்சி மூலமாக, இந்த நேரம் 4.23 நிமிடங்களாக குறைந்தது. அவளது கடின முயற்சியின் பலனாக பல்வேறு விருதுகளை அவள் பெற்றிருக்கிறாள். நான் பெருமையாக உணர்கிறேன்” என பிரணவியின் தந்தையான பிரமோத் குப்தா தெரிவித்தார்.

கொரோனா கொடுத்த வாய்ப்பு

கொரோனா அனைவருடைய வீட்டுக் கதவுகளையும் சாத்தியிருந்த நாட்களில் குப்தாவின் குடும்பம் அதனை தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக பார்த்தார்கள். தினமும் குடும்பமாக அமர்ந்து புதிர் விளையாட்டு, கதைகள் வாசித்தல், நாடுகளின் இருப்பிடத்தை வரைபடத்தில் குறிப்பது போன்றவற்றில் தங்களது நேரத்தை செலவிட்டார்கள்.

பிரணவி இதன்மூலம் தான் கற்றதை தனது யூடியூப் சேனலில் பதிவிடத் தொடங்கியிருக்கிறாள். தானே வடிவமைத்த 300 புதிர்கள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பசுமை பாதுகாப்பின் அவசியம், யோகா (தனது அம்மாவிடம் கற்றுக்கொண்டிருக்கிறார்) ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டிருக்கிறது இந்த வாண்டு.

தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறார் பிரணவி கூடவே உலக நாடுகளின் கொடிகளையும். ஆக, நிச்சயம் வெகுவிரைவில் கின்னஸ் புத்தகத்திலும் தனது பிஞ்சுக்கால் பதிக்க இருக்கிறாள் சாதனைச் சிறுமி பிரணவி.