வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும். அது மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்ககூடியதாகவும் இருக்கவேண்டும் என நினைக்கப்போய், இறுதியில் அந்த முடிவை எடுத்திருக்கிறார் அமீரகத்தைச் சேர்ந்த காலித் அல் மஜார். அப்படியென்ன முடிவு என்கிறீர்களா? அதாவது, அமீரகத்தின் 7 எமிரேட்டையும் சைக்கிளால் சுற்றிவருவது. அதுவும் குறைவான நேரத்தில்.
முடிவெடுப்பது எப்போதும் ஈஸி தான். அதனை செய்து முடிப்பதுதானே கஷ்டம். ஆரம்பத்தில் காலித்திற்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது. துவக்கத்தில் 100 கிலோமீட்டர் கூட தொடர்ச்சியாக தன்னால் சைக்கிள் ஓட்ட முடியவில்லை எனக் கூறுகிறார் காலித்.
அதன்பிறகு இரண்டு மாத காலம் தொடர்ச்சியான சைக்கிள் பயணத்தின் மூலம் உடலை இந்த நெடும் பயணத்திற்கு ரெடி செய்திருக்கிறார். இறுதியாக 7 எமிரேட்டையும் சைக்கிள் சக்கரங்களால் இணைக்க புறப்பட்டிருக்கிறார் காலித். மொத்தம் 321 கிலோமீட்டர். அனுபவம் மற்றும் பயிற்சி ஆகியவற்றின் துணையோடு களமிறங்கிய காலித் 11 மணிநேரம் 53 நிமிடங்களில் மொத்த தூரத்தை அடைந்திருக்கிறார்.
இறுதி 40 கிலோமீட்டர்களைக் கடக்க மிகுந்த சிரமப்பட்டதாகவும் மலைப்பகுதியில் ஏறுவது மிகுந்த வலி நிறைந்த அனுபவமாக அமைந்ததாக காலித் குறிப்பிட்டார்.