இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அமீரகத்திலும் நேற்று இந்திய பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தினம் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. துபாய் அல் கைலில் உள்ள ஜெம்ஸ் மில்லினியம் பள்ளியில் அங்கு பணியாற்றும் 110 ஆசிரியர்களை கெளரவிக்கும் விதமாக 12ம் வகுப்பு மாணவர்கள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டதால் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் போல இதர வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் மூலம் ஆசிரியர்களின் பொறுப்புகளை தங்களால் அறிந்துகொள்ள முடிந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதேபோல ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தும் மாணவர்கள் நன்றிகடன் செலுத்தினர். இதேபோன்று அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் இந்திய பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
