UAE Tamil Web

வரதட்சணை வாங்கினாலோ கொடுத்தாலோ உடனடியாக டிஸ்மிஸ்..! – அமீரகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த இந்தியரின் நிறுவனம்..!

roy

“வரதட்சணை வாங்கினால் அல்லது கொடுத்தால் வேலை பறிக்கப்படும்” என அறிவித்திருக்கிறது ஷார்ஜாவில் இயங்கிவரும் அரீஸ் நிறுவனம். உடனடியாக இந்த பாலிசி நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார் இதன் தலைமை நிர்வாக அதிகாரியான சோஹான் ராய். இந்த அறிவிப்பு அமீரகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக சமீபத்தில் மூன்று பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த சம்பவம் தான் ராயின் இந்த முடிவிற்குக் காரணம்.

10 விதிமுறைகளைக் கொண்ட இந்த வரதட்சணைத் தடுப்பு பாலிசியில் அனைத்து பணியாளர்களும் கையெழுத்திட வேண்டும். இந்நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் 16 நாடுகளில் பணியாற்றுபவர்களுக்கும் இதே விதிமுறை கடைபிடிக்கப்படும் என ராய் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் இதற்கென தனியாக துறை அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் உறுப்பினர்களாக பெண்கள் நியமிக்கப்படுவர் எனவும் ராய் தெரிவித்தார். இந்தப் புதிய பாலிசியின்படி பணியாளர்களின் மனைவி அல்லது பெற்றோர் புகார் அளித்தால் உடனடியாக அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினை தனது மனைவி அபினி மற்றும் இரட்டைப் பெண் குழந்தைகளான நிர்மால்யா, நிவேத்யா ஆகியோர் வரவேற்றதாக ராய் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய ராய்,” நமது சமூகத்தில் இருந்து இந்த நச்சுப் பாரம்பரியமான வரதட்சணையை நீக்குவது சிரமமான காரியம் தான். ஆனால் நாம் முதலில் அதை எதிர்த்துப் போராட வேண்டும். அதன் முதல்படி தான் இந்தத் திட்டம். பெண் உறுப்பினர்களால் ஆன இந்த வரதட்சணை தடுப்பு கமிட்டியில் அளிக்கப்படும் புகார்கள் 24 மணிநேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வரதட்சணை தடுப்புத் திட்டத்தின் தூதுவர் விருது ஆகியவை மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும்” என்றார்.

மகளிர் மேலாண்மை மற்றும் வேலையில்லா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கவும் இத்திட்டம் வழிவகுக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த பெற்றோருக்கு ஓய்வூதியம், பணியாளர்களின் குழந்தைகளுக்கு வருடந்தோறும் கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை இந்த நிறுவனம் நடைமுறைப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

roy
705 Shares
Share via
Copy link
Powered by Social Snap