UAE Tamil Web

பெற்ற குழந்தைகளை பிச்சை எடுக்கவைத்த 3 தாய்மார்கள் – விளாசிய நீதிமன்றம்..!

court

துபாய் வீதிகளில் தங்களின் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த எகிப்து நாட்டைச் சேர்ந்த மூன்று தாய்மார்களை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் துபாயில் உள்ள நைஃப் (Naif) பகுதியில் ஏழு வயது சிறுமி பிச்சை எடுப்பதை கவனித்த நபர் ஒருவர் துபாய் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் அந்த சிறுமியை விசாரித்ததில் தனது தாய் சொன்னதால்தான் பிச்சை எடுத்தேன் என்று கூறியுள்ளார். தாயிடம் விசாரித்ததில் தன் மகள் கூறியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டதோடு, எகிப்து நாட்டைச் சேர்ந்த வேறு இரண்டு தாய்மார்களும் அவர்களது குழந்தைகளை இதுபோலவே பிச்சை எடுக்க வைப்பதையும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்களை தேடிய துபாய் காவல்துறை நாட்டை விட்டு தப்பிச் செல்ல துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தயாராக இருந்த இரண்டு தாய்மார்களையும் கைது செய்தது.

தனது பெண்ணை பிச்சை எடுக்க வைத்த முதல் தாய் கூறுகையில் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை அதனால் இவ்வாறு செய்தேன் என்று கூறினார். அவர் மகள் கையில் 57 திர்ஹம்ஸ் பணம் இருந்துள்ளது.

இரண்டாவது தாய் தனது 8 வயது மகளை பிச்சை எடுக்க வைத்துள்ளார். பிச்சை எடுத்து 3000 திர்ஹம்ஸ் பணம் வசூல் செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

மூன்றாவது தாய் அவளது 8 மாத கைக்குழந்தையை கையில் வைத்தவாறு பிச்சை எடுத்துள்ளார் அதையும் அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

மேலும் நைஃப் பகுதியின் தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இவர்கள் பிச்சை எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து சிறுமி பிச்சை எடுப்பதை நேரில் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நபர் கூறுகையில், சிறுமி தனியாக பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். அவளின் பாதுகாப்பிற்காகவே போலீசாரிடம் தகவல் தெரிவித்தேன் என்று கூறினார்.

இதையடுத்து துபாய் பொது வழக்கு நீதிமன்றம் 3 பெண்கள் மீதும் பிச்சை எடுத்தல், மனித உரிமைமீறல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

நீதிமன்ற விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி சீரழித்தது, அவர்களை பிச்சை எடுக்க வைத்தது போன்ற காரணங்களுக்காக மூன்று தாய்மார்களுக்கும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும், 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டதோடு, தண்டனை காலம் முடிந்த பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

court
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap