உலகின் மிகவும் பிசியான விமான ரூட்களில் துபாய் – இந்தியாவும் ஒன்றாகும். லட்சக்கணக்கான இந்திய மக்கள் அமீரகத்தில் வசித்து வருகின்றனர். கொரோனா காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் ஏராளமான மக்கள் இந்த ரூட்டில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் துபாய் – இந்தியா இடையிலான டிக்கெட்களின் கட்டணம் இருமடங்கு விலையேறியுள்ளதாக டிராவல் ஏஜென்சிகள் தெரிவித்திருக்கின்றன. இருந்தபோதிலும் டிசம்பர் மாதத்திற்கான துபாய் – இந்தியா இடையிலான விமான டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
என்ன காரணம்?
அமீரகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது காரணமாக பல இந்தியர்கள் தங்களது குடும்பத்துடன் தாயகம் திரும்பி வருகின்றனர். வழக்கமாக, ஜூலை மாதங்களில் துபாய் – இந்தியா இடையே பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
கொரோனா தடை காரணமாக மாதக்கணக்கில் சொந்த ஊர் செல்ல முடியாமல் இருந்த பலரும் இப்போது பயணிப்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக 1200 – 1300 திர்ஹம்ஸ்க்கு கிடைக்கும் துபாய் – இந்தியா விமான டிக்கெட்களை பல விமான நிறுவனங்கள் 2300 திர்ஹம்ஸ்க்கு தற்போது விற்றுவருகின்றன.
உலகக்கோப்பை T20, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல், துபாய் எக்ஸ்போ ஆகியவை காரணமாகவும் இரு நாடுகளுக்கிடையே விமானப் போக்குவரத்து கணிசமாக உயர்ந்திருப்பதாக டிராவல் ஏஜென்சிக்கள் தெரிவித்திருக்கின்றன.
