UAE Tamil Web

தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் விழுந்த 11 மாதக் குழந்தை – காவல்துறைக்கு வந்த போன்கால்..!

Sharjah-Police_

கோர் ஃபக்கான் பகுதியில் வசித்துவரும் குடும்பம் ஒன்றில், நேற்று எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது. வீட்டின் குளியலறையில் வைக்கப்பட்டிருந்த வாளிக்குள் 11 மாத பெண் குழந்தை தவறி விழுந்திருக்கிறது.

- Advertisment -

சிறிது நேரத்திலேயே குழந்தையைத் தேடிய குடும்பத்தினர், விஷயத்தின் வீரியத்தை உணர்ந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு அல் காசிமி மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு தற்போது உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோர் ஃபக்கானைச் சேர்ந்த 11 மாதக் குழந்தை ஒன்று தனது வீட்டில் உள்ள வாளிக்குள் தவறி விழுந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அல் காசிமி மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைக்கு விரைந்துவந்த காவல்துறை இதுகுறித்து விசாரணையைத் துவங்கினர். சந்தேகிக்கும்படி ஏதுமில்லை எனவும், இது விபத்துதான் எனவும் இந்த வழக்கை விசாரித்துவரும் வாசித் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எச்சரிக்கை

“பெற்றோர்கள் குறிப்பாக மிக இளம் வயதுள்ள குழந்தைகளைக் கொண்டிருப்போர் எப்போதும் கவனமாக செயல்படவேண்டும். குழந்தைகளை எப்போதும் தங்களுடைய கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வாளி போன்ற தண்ணீர் சேகரிப்புப் பகுதிகளை பயன்படுத்திய நேரம் போக மீதி நேரங்களில் மூடியே வைக்கவேண்டும்” என காவல்துறை பெற்றோர்களை எச்சரித்திருக்கிறது.