பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது சுற்றுலாப் பயணி ஒருவர் அவரது சாமான்களை தொலைத்த நிலையில், துபாய் காவல்துறை அதை வெறும் 30 நிமிடங்களில் கண்டுபிடித்து அவரிடம் திருப்பி அளித்துள்ளது பலரை பெருமையடைய வைத்துள்ளது.
அந்த ரஷ்ய சுற்றுலாப்பயணிக்கு தான் சென்ற பேருந்தின் விவரங்கள் நினைவில் இல்லாததால், துபாய் முழுவதும் அவர் பயணம் செய்த வாகனத்தை பற்றி அறிய துபாய் போலீசார் ஒரு குழுவை உடனடியாக அமைத்தனர்.
அக்குழுவினர் பல தரவுகளை மதிப்பாய்வு செய்து, தொலைந்து போன பொருட்களை மீட்டெடுக்க, நகரம் முழுவதும் உள்ள ஸ்மார்ட் அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
துபாய் சுற்றுலா காவல் துறையின் இயக்குனர் கர்னல் கல்ஃபான் அல் ஜல்லாஃப் கூறுகையில், பயணத்தின் போது இரண்டு பைகள், மொபைல் போன், பணப்பை, சில கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் பணம் தொலைந்து போனது குறித்து கால் சென்டருக்கு (901) சுற்றுலாப் பயணி தகவல் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணி லா மெரில் இருந்து பாம் வரை சென்ற பேருந்தை சிறப்புக் குழு அடையாளம் கண்டுள்ளது. பின்னர் அவர்கள் பஸ் டிரைவரைத் தொடர்பு கொண்டனர், அவர் அந்த சுற்றுலா பயணியின் பொருட்களையு போலீசாரிடம் கொடுத்துள்ளார். தன்னால் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செயல்பாடுகள் அனைத்து வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.